தேசிய செய்திகள்

இன்ஸ்டாகிராமில் வந்த விளம்பரத்தை கிளிக் செய்த அடுத்த நொடி..ரூ.1.22 லட்சத்தை இழந்த நபர்

இன்ஸ்டாகிராமில் வந்த விளம்பரத்தை கிளிக் செய்ததால் செல்போன் ஹேக் செய்யப்பட்டு, வங்கிக் கணக்கில் இருந்து ரூ.1.22 லட்சம் திருடப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

ஹரியானா மாநிலம் பரிதாபாத்தில் உள்ள பர்வதியா காலனியைச் சேர்ந்த ஒருவர் கடந்த அக்டோபர் 17-ம் தேதி இன்ஸ்டாகிராமில் வந்த விளம்பரம் ஒன்றை கிளிக் செய்துள்ளார். அப்போது அவரது செல்போனில் சந்தேகத்திற்குரிய கோப்பு பதிவிறக்கமாகியுள்ளது. இதையடுத்து செல்போன் ஹேக் செய்யப்பட்டு, அவரது வங்கிக் கணக்கில் இருந்து ரூ.1,22,999 பணம் எடுக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து பாதிக்கப்பட்ட நபர் அளித்த புகாரின் அடிப்படையில் சைபர் கிரைம் போலீசார் விசாரணை நடத்தினர். இதில் திருடப்பட்ட பணத்தில் ரூ.98 ஆயிரம் உத்தரகாண்ட் மாநிலத்தைச் சேர்ந்த குர்னம் சிங் என்பவரின் வங்கிக் கணக்கிற்கு மாற்றப்பட்டிருப்பது தெரியவந்தது.இதையடுத்து அவரை போலீசார் கைது செய்தனர்.

இந்த மோசடியில் மேலும் யாருக்கெல்லாம் தொடர்பு உள்ளது என்பது குறித்து விசாரணை நடைபெற்று வருகிறது.சைபர் மோசடியில் சிக்காமல் இருக்க அறிமுகமில்லாத விளம்பரங்களை கிளிக் செய்யவோ, சந்தேகத்திற்குரிய கோப்புகளைப் பதிவிறக்கம் செய்யவோ வேண்டாம் என போலீசார் அறிவுறுத்தியுள்ளனர்.

SCROLL FOR NEXT