மும்பை,
மராட்டிய மாநிலம் டோம்பிவிலி - கல்யாண் பகுதியில் ஐகோர்ட்டில் ஜாமீனில் வெளிவந்த நபர் ஒருவர், 'ப்ரோகெய்ன் ரெண்டல் சர்வீசஸ்' என்ற பெயரில் போலி முதலீட்டுத் திட்டங்களை நடத்தி, 67 முதலீட்டாளர்களிடம் ரூ.7 கோடி ரூபாய் மோசடி செய்துள்ளார்.
பிரசாந்த் அங்னே மற்றும் அவரது மனைவி பல்லவி ஆகியோர் கடந்த 2023-ம் ஆண்டு 'கன்கன்ஸ்மார்ட் ஷேர்ஸ் அண்ட் ஸ்டாக் புரோக்கர் பிரைவேட் லிமிடெட்' என்ற முதலீட்டு நிறுவனத்தை உருவாக்கினர். அதனைத் தொடர்ந்து கவர்ச்சிகரமான வருமானம் கிடைக்கும் என்ற பொய்யான வாக்குறுதிகளை அளித்து 52 முதலீட்டாளர்களை ரூ. 2.77 கோடிக்கு பண மோசடி செய்தனர். இதையடுத்து பாண்டுப்பில் அவர் மீது போலீசார் வழக்கு பதிவு செய்தனர்.
தற்போது ஐக்கோர்ட்டில் ஜாமீனில் வெளிவந்த அங்னே, தனது பாணியை மாற்றி மீண்டும் சமூக வலைதளங்களில் ஊக்கமூட்டும் வீடியோக்களை வெளியிட்டு மக்கள் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளார். அதனைப் பயன்படுத்தி, மராட்டிய மாநிலம் டோம்பிவிலி - கல்யாண் பகுதியில் 'ப்ரோகெய்ன் ரெண்டல் சர்வீசஸ்' என்ற போலி நிறுவனத்தை உருவாக்கினார். அதன் பின்னர், தனது நிறுவனத்தின் திட்டங்களில் முதலீடு செய்தால் தினசரி 1% வட்டி மற்றும் மாதம் 5% முதல் 30% வரை லாபம் தருவதாக ஆசை வார்த்தை கூறியுள்ளார்.
அதனை நம்பி, தனிநபர் ஒருவரிடம் இருந்து ரூ.60,000 முதல் அதிகபட்சமாக ரூ.76 லட்சம் வரை முதலீடுகள் பெறப்பட்டுள்ளன. மேலும் ஓய்வுபெற்ற தொழில் வல்லுநர்கள் மற்றும் மூத்த குடிமக்கள் உள்ளிட்ட 67 முதலீட்டாளர்கள் அதில் பணம் செலுத்தியுள்ளனர். அவர்களிடமிருந்து ரூ.7 கோடி ரூபாய் அங்னே பெற்றுள்ளார்.
ஆரம்பத்தில் சில மாதங்கள் கூறியபடி லாபத் தொகையை வழங்கி முதலீட்டாளர்களின் நம்பிக்கையைப் பெற்றுள்ளார். அதன் பின்னர் திடீரென அசல் மற்றும் லாபத் தொகையை தராமல் ஏமாற்றிவிட்டு, பணத்துடன் தலைமறைவாகினார். இச்சம்பவம் குறித்து பண மோசடியில் ஏமாற்றப்பட்டவர்கள் டோம்பிவிலி போலீசாரிடம் புகார் அளித்தனர்.
புகாரின் அடிப்படையில் போலீசார் வழக்குப் பதிவு செய்து, தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். விசாரணையில் டோம்பிவிலி உதவி காவல் ஆணையர் விஜய் மராத்தே, பாண்டுப், டோம்பிவ்லி மற்றும் தானே ஆகிய இடங்களில் ஆங்னே மீது 3 வழக்குகள் இருந்ததாக தெரிவித்தார். தற்போது பிரசாந்த் அங்னே தலைமறைவாக உள்ள நிலையில், அவரைப் பிடிக்க தனிப்படை அமைக்கப்பட்டுள்ளன.
மேலும், இதேபோன்று அந்த நிறுவனத்தில் பணத்தை முதலீடு செய்து ஏமாந்த பிற முதலீட்டாளர்கள் யாரேனும் இருந்தால், உடனடியாக போலீசாரை அணுகி புகார் அளிக்குமாறு இன்வெஸ்டிகேஷன் அதிகாரி ராம்சிங் கவுட் பொதுமக்களுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளார்.