நகரி,
ஆந்திர மாநிலத்தில் தனது 3 மகள்களை பராமரிக்க முடியாத விரக்தியில், அவர்களுக்கு விஷம் கொடுத்து கொன்றுவிட்டு தந்தையும் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் நடந்துள்ளது.
ஆந்திர மாநிலம் பிரகாசம் மாவட்டம் அக்ரஹாரம் கிராமத்தை சேர்ந்தவர் சுதாகர் (வயது 35). டிரைவர். 3 ஆண்டுகளுக்கு முன்பு இவரது மனைவி, குழந்தைகளையும் கணவரையும் விட்டுவிட்டு சென்றுவிட்டதாக கூறப்படுகிறது. அதன்பிறகு சுதாகர், தனியாக தனது 3 மகள்களை வளர்த்து வந்தார். கோசித்தா (13) பூஜிதா (11) லோகிதா (8) என்னும் சிறுமிகளான அவர்களை பராமரிப்பது, சுதாகருக்கு சவாலாக இருந்தது.
இந்த நிலையில் தனது மகள்களுக்கு சுதாகர் குளிர்பானத்தில் விஷம் கலந்து கொடுத்துவிட்டார். அவர்கள் இறந்ததும், வீட்டை பூட்டிவிட்டு, கிராமத்தின் ஒதுக்குப்புறத்தில் வயல்வெளியில் இருந்த ஒரு மரத்தில் சுதாகர் தூக்கு மாட்டி தற்கொலை செய்து கொண்டார்.
தோட்ட வேலைக்கு சென்ற கிராம மக்கள் இதை பார்த்துவிட்டு போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். போலீசார் அவரது உடலை கைப்பற்றியதுடன், அவரது வீட்டுக்கு சென்று பார்த்தபோது மேலும் அதிர்ச்சி காத்திருந்தது. வீடு வெளியே பூட்டப்பட்டு இருந்தது. உள்ளே அவரது மூன்று மகள்களும் வாயில் நுரை தள்ளியபடி இறந்து கிடந்தனர். அவர்களின் உடல்களை பிரேத பரிசோதனைக்கு அனுப்பிய போலீசார், விசாரணையில் இறங்கினர்.
மனைவி பிரிந்து சென்றுவிட்டதாலும், தாயார் இல்லாமல் 3 பெண் பிள்ளைகளை வளர்க்க சிரப்பட்டு வந்ததால் அவர் மகள்களை கொன்று விட்டு, தானும் தற்கொலை செய்திருக்கலாம் என்று போலீசாரின் முதல் கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது. சமீபத்தில் சுதாகரின் மூத்த மகள் வயதுக்கு வந்துவிட்டதாகவும் அவரை பராமரிப்பது கஷ்டமாக இருப்பதாகவும் சுதாகர் புலம்பி வந்ததாக கிராம மக்கள் தெரிவித்து உள்ளனர். இந்த சம்பவம் அந்த பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.