பாட்னா,
பீகார் மாநிலத்தில், தன்னை ஐ.ஏ.எஸ். அதிகாரி என்றும், தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவலின் நேரடி கட்டுப்பாட்டில் வேலை செய்யும் ‘ரகசிய உளவாளி’ என்றும் கூறிய நபரை போலீசார் கைது செய்துள்ளனர்.
பீகார் மாநிலம் ககாரியா மாவட்டம், கோக்ரி காவல் எல்லைக்குட்பட்ட பகுதிகளில் போலீசார் மற்றும் மாவட்ட புலனாய்வு பிரிவு அதிகாரிகள் நேற்று முன்தினம் இரவு வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது ‘இந்திய அரசு’ எனக் குறிப்பிடபட்ட பெயர்ப் பலகையுடன் வந்த ஒரு வாகனத்தை சந்தேகத்தின்பேரில் நிறுத்தி சோதனை செய்தனர். அந்த வாகனத்தில் வந்த நபரிடம் விசாரணை நடத்தியபோது, அவர் தனது செல்வாக்கை காட்டும் வகையில் தான் சாதாரண நபர் இல்லை என்றும், தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவலின் ரகசிய உளவாளி என்றும் கூறியிருக்கிறார். தன்னை ஐ.எ.எஸ். அதிகாரி என்றும் அறிமுகப்படுத்தியிருக்கிறார்.
அவர் மீது சந்தேகம் வலுவடைந்ததையடுத்து அவரிடம் தீவிர விசாரணை நடத்தினர். அப்போது, அவரது பெயர் மணீஷ் குமார் குப்தா என்பதும், அவர் போலி ஐஏஎஸ் அதிகாரி என்பதும், நீண்ட காலமாக ஐஏஎஸ் அதிகாரி என்ற போர்வையில் வலம் வந்து மோசடியில் ஈடுபட்டதும் தெரியவந்தது. இதையடுத்து அவரது வீட்டில் சோதனை நடத்தப்பட்டு, வீட்டில் இருந்து 2 சொகுசு வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டன.
அவரது வீட்டைச் சுற்றி ஏராளமான சிசிடிவி கேமராக்கள் பொருத்தபட்டிருந்ததாகவும் போலீசார் தெரிவித்துள்ளனர். இதையடுத்து அவரது பின்னணி, சொத்துகள், பயன்படுத்திய ஆவணங்கள், வாகனங்கள் மற்றும் அவருடன் தொடர்பில் இருந்த நபர்கள் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
மணீஷ் குப்தா மோசடி மூலம் ரூ.100 கோடிக்கும் மேல் சொத்துகளை சேர்த்திருக்கலாம் என போலீசார் கருதுகின்றனர். ஆனால் இந்த தொகை மற்றும் சொத்துகளின் முழுமையான மதிப்பு குறித்து அதிகாரப்பூர்வமாக இறுதி செய்யப்படவில்லை. விசாரணை முடிவில்தான் உண்மையான சொத்து மதிப்பு மற்றும் பணத்தின் மதிப்பு தெரியவரும்.