தேசிய செய்திகள்

சபரிமலை மண்டல பூஜை தரிசனம்: நாளை மறுநாள் ஆன்லைன் முன்பதிவு தொடக்கம்

இந்த ஆண்டு மண்டல, மகர விளக்கு பூஜை காலம் நவம்பர் 16-ந் தேதி தொடங்குகிறது.

சபரிமலை,

கேரள மாநிலம் சபரிமலை அய்யப்பன் கோவிலில் மண்டல பூஜை தரிசனத்துக்கான ஆன்லைன் முன்பதிவு நாளை மறுநாள் (29-ந் தேதி) காலை 10 மணிக்கு தொடங்குகிறது.

மண்டல பூஜை

சபரிமலை கோவிலில் பக்தர்கள் கூட்டத்தை ஒழுங்குபடுத்தும் வகையில், ஆன்லைன் முன்பதிவு மூலம் தரிசனத்துக்கு அனுமதி வழங்கப்பட்டு வருகிறது. இந்த ஆண்டு மண்டல, மகர விளக்கு பூஜை காலம் நவம்பர் 16-ந் தேதி தொடங்குகிறது.

இதற்கான ஆன்லைன் முன்பதிவு நாளை மறுநாள் காலை 10 மணிக்கு தொடங்கும் என்று திருவிதாங்கூர் தேவஸ்வம் போர்டு அறிவித்துள்ளது. பக்தர்கள் www.sabarimalaonline.org என்ற இணையதளத்தில் முன்பதிவு செய்து கொள்ளலாம்.

பக்தர்கள் அனுமதி

நிலக்கல், பம்பை வழியாக தினமும் 60 ஆயிரம் பக்தர்களுக்கு அனுமதி வழங்கப்படும். எருமேலி பெருவழிப்பாதை மற்றும் வண்டிப்பெரியாறு, சத்திரம் பாதைகள் வழியாக தலா 3 ஆயிரம் பக்தர்கள் வீதம் தினமும் அனுமதிக்கப்படுவார்கள்.

மேலும், நிலக்கல், எருமேலி, வண்டிப்பெரியாறு ஆகிய இடங்களில் நேரடி முன்பதிவு (ஸ்பாட் புக்கிங்) வசதியும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. பக்தர்கள் முன்கூட்டியே முன்பதிவு செய்து, தரிசனத்துக்கு வருமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

SCROLL FOR NEXT