இம்பால்
மணிப்பூரில் குழந்தைகள் குண்டுவீசி படுகொலை செய்யப்பட்ட சம்பவத்திற்கு கண்டனம் தெரிவித்து, அனைத்து மணிப்பூர் ஐக்கிய கிளப் அமைப்பை சேர்ந்தவர்கள், சமூக குழுக்களுடன் சேர்ந்து இம்பால் நகரில் இன்று பேரணியாக சென்று போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது, திராங்லாவ்பி கிராமத்தில் 2 குழந்தைகள் கொல்லப்பட்டும் மற்றும் குழந்தைகளின் தாயார் காயம் அடைந்ததற்கும் நீதி கோரி கோஷம் எழுப்பினர்.
இதனை தொடர்ந்து ஹோதம் லெய்ராக் பகுதியில் குவிக்கப்பட்டு இருந்த மத்திய மற்றும் மாநில படைகள், அவர்களை தடுத்து நிறுத்தினர். பின்னர் ஒரு சிறு குழுவை முன்னே செல்ல அனுமதித்தனர். இதனையடுத்து, அவர்கள் முதல்-மந்திரி ஒய்.கே. சிங்கை சந்தித்து தங்களுடைய கோரிக்கைகளை மனுவாக அளித்தனர்.
மணிப்பூரின் பிஷ்ணுப்பூர் மாவட்டத்தில் மொய்ராங் திராங்லாவ்பி கிராமத்தில் வீடு ஒன்றின் மீது திடீரென வெடிகுண்டுகள் வீசப்பட்டன. இந்த சம்பவத்தில் வீட்டில் இருந்த 5 வயது சிறுவன் மற்றும் சிறுவனின் 5 மாத சகோதரி என 2 குழந்தைகள் படுகொலை செய்யப்பட்டனர். இதில், வீடு முற்றிலும் பாதிப்படைந்தது.
இதனால், அக்கம்பக்கத்தில் உள்ளவர்களும் அதிர்ச்சி அடைந்தனர். மலை சரிவில் இருந்து கிராமத்திற்குள் குண்டுகள் வீசப்பட்டு உள்ளன. இதனால் அந்த பகுதியில் பதற்றம் ஏற்பட்டது. இதனை தொடர்ந்து, பாதுகாப்பு படையினர் உஷார்படுத்தப்பட்டதுடன், கூடுதல் படைகளும் குவிக்கப்பட்டன.
பக்கத்திலுள்ள கிராமங்களை கண்காணிக்கும் பணியுடன், அருகேயுள்ள மலை பிரதேசங்களில் தேடுதல் பணிகளையும் அதிகாரிகள் மேற்கொண்டு வருகின்றனர். இதேபோன்று, அகாம்பத் நிவாரண முகாமில் இருந்த 7 வயது சிறுமி சில நாட்களுக்கு முன்பு காணாமல் போன நிலையில், சந்தேகத்திற்குரிய சூழலில், சிறுமியின் உடல் கண்டெடுக்கப்பட்டு உள்ளது. அந்த சிறுமி பாலியல் துன்புறுத்தல் செய்யப்பட்டு, கொல்லப்பட்டு இருக்க கூடும் என முதல்கட்ட அறிக்கைகள் தெரிவிக்கின்றன.
இதுதொடர்பாக தீவிர விசாரணையும் நடத்தப்பட்டு வருகிறது. சிறுமி உள்ளிட்ட 3 குழந்தைகள் படுகொலை சம்பவம் அந்த பகுதியில் பெரும் பதற்றம் ஏற்படுத்தி உள்ளது. இந்த தாக்குதல் மீண்டும் நடைபெற கூடும் என்ற அச்சத்தில் அந்த பகுதி மக்கள் உள்ளனர்.
இந்த நிலையில், மணிப்பூரின் தலைநகர் இம்பால் நகர், இம்பால் பள்ளத்தாக்கு மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் கடைகள், சந்தைகள் நேற்று அடைக்கப்பட்டு இருந்தன. பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டு உள்ளது. இம்பால் மேற்கு மாவட்டத்தின் மாவட்ட மாஜிஸ்திரேட், புதிய குற்றவியல் சட்டத்தின் பிரிவு 163-ன் கீழ் தடையுத்தரவுகள் பிறப்பிக்கப்பட்ட நிலையில் இந்த நிலை காணப்படுகிறது.