இம்பால்
மணிப்பூரில் முதல்-மந்திரி பதவி விலகக்கோரி மெய்தி, நாகா குழுவினர் ஆயிரக்கணக்கானோர் பேரணியாக சென்று எதிர்ப்பை பதிவு செய்தனர்.
மணிப்பூரில் கடந்த 2023-ம் ஆண்டு மே 3-ந்தேதி குகி மற்றும் மெய்தி இனங்களுக்கு இடையே ஏற்பட்ட மோதல், வன்முறையாக உருமாறியது. இதில், 60-க்கும் மேற்பட்டோர் ஒரு சில மாதங்களில் கொல்லப்பட்டனர். வன்முறையை அடுத்து, ஆயிரக்கணக்கானோரின் வீடுகள் சூறையாடப்பட்டன. இதனால், மாநிலத்தில் ஜனாதிபதி ஆட்சி அமல்படுத்தப்பட்டது.
ராணுவம் வரவழைக்கப்பட்டு நிலைமை கட்டுக்குள் கொண்டு வரப்பட்டது. எனினும், 49 பேரை காணவில்லை. இதன்பின்னர், அமலில் இருந்த ஜனாதிபதி ஆட்சி கடந்த ஆண்டு விலக்கிக்கொள்ளப்பட்டது. பா.ஜ.க.வை சேர்ந்த ஒய்.கே. சிங், கடந்த பிப்ரவரி மாதம் முதல்-மந்திரியாக பதவியேற்றார்.
எனினும், 3 ஆண்டுகளாக தொடர்ந்து நடந்து வந்த வன்முறையால் 306 பேர் வரை பலியாகி உள்ளனர். இதனை சட்டசபையில் சமீபத்தில் மணிப்பூர் அரசு உறுதிப்படுத்தியது.
எனினும், அவ்வப்போது மோதல்கள் நடந்து வருகின்றன. வன்முறையால் பாதிக்கப்பட்ட மணிப்பூரில் பயங்கரவாதிகள், ஆயுதக்குழுக்களுக்கு எதிரான நடவடிக்கையை பாதுகாப்பு படையினர் தீவிரப்படுத்தி வருகின்றனர்.
சமீபத்தில், மெய்தி இனத்தை சேர்ந்த 3 பேர் குக்கி பயங்கரவாதிகளால் கொல்லப்பட்டனர். இதனால் ஆத்திரம் அடைந்த மெய்தி இன குழுக்களின் சார்பில் நேற்று தலைநகர் இம்பாலில் பிரமாண்ட பேரணி நடந்தது. திட்டிம் மைதானத்தில் இருந்து தாவ் மைதானம் நோக்கி ஆயிரக்கணக்கானோர் பேரணியாக சென்றனர்.
பூர்வகுடி மக்களை பாதுகாக்க தவறியதற்காக முதல்-மந்திரி கெம்சந்த் சிங் பதவி விலக வேண்டும். பயங்கரவாத குழுக்களுடன் செய்து கொண்ட தாக்குதல் நிறுத்த ஒப்பந்தத்தை ரத்து செய்ய வேண்டும் என்று அந்த அமைப்பின் ஒருங்கிணைப்பாளர் கூறினார்.
இதேபோன்று, உள்ளூர் மக்களை பாதுகாக்க வேண்டும் என்று அப்போது அவர்கள் கோஷம் எழுப்பியபடி சென்றனர். சாண்டெல் மற்றும் சேனாபதி மாவட்டங்களில் நாகா அமைப்புகள் உள்பட பல்வேறு அமைப்புகளும் பேரணியாக சென்றனர். குகி-ஜோ பயங்கரவாத அமைப்புகள் வன்முறையில் ஈடுபடுகின்றனர் என்று கூறி அவர்கள் கோஷம் எழுப்பினர்.
சமீபத்தில், மணிப்பூரில் குகி-ஜோ என்ற பெண்கள் கூட்டமைப்பு, மணிப்பூரில் மீண்டும் ஜனாதிபதி ஆட்சி வேண்டும் என வலியுறுத்தியது. இதுபற்றி தீ வைப்புகள், படுகொலைகளை நிறுத்துங்கள். குகி-ஜோ மக்களை பாதுகாத்திடுங்கள் என்ற பொருளில் கடந்த 21-ந்தேதி நடந்த செய்தியாளர்கள் சந்திப்பில், குகி-ஜோ கவுன்சிலின் செய்தி தொடர்பாளர் ஜின்ஜா உவல்ஜாங் பேசும்போது, மணிப்பூரில் காணப்படும் நெருக்கடியான சூழல், அரசியல் சார்ந்த விசயம் மட்டும் கிடையாது.
அதிக அளவில் பாதுகாப்பு படைகளை குவித்து மட்டுமே இதற்கு தீர்வு கண்டு விட முடியாது. நாங்கள் வாழ வேண்டும். நாங்கள் உயிர் வாழ வேண்டும் என விரும்புகிறோம் என்றார்.
3 ஆண்டுகளாக எந்த பணிகளும் வேலைக்கு ஆகவில்லை. ஏனெனில் இது அரசியல் தொடர்பான விவகாரம். எங்களுடைய குகி இன மக்கள், ஜனாதிபதி ஆட்சியின் கீழ் பாதுகாப்பை உணர்ந்தனர். வன்முறைக்கு யாரும் பலியாகவில்லை.
ஆனால், புதிய அரசு உருவான பின்னர். எங்களுடைய சமூகத்தின் 32 பேர் கொல்லப்பட்டு உள்ளனர். அதனால், மணிப்பூரில் மீண்டும் ஜனாதிபதி ஆட்சியை அமல்படுத்துங்கள் என்று கூறினார். உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கும், எரிந்து போன வீடுகளுக்கும் இழப்பீடு வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார். நாங்கள் இந்தியாவில் இருந்து பிரிவினை வேண்டும் என கோரவில்லை என்றும் அப்போது அவர் கூறினார்.