இம்பால்
மணிப்பூரில் தடை செய்யப்பட்ட பயங்கரவாத அமைப்பை சேர்ந்த 2 பயங்கரவாதிகள் கைது செய்யப்பட்டனர்.
மணிப்பூரில் கடந்த 2023-ம் ஆண்டு மே 3-ந்தேதி குகி மற்றும் மெய்தி இனங்களுக்கு இடையே ஏற்பட்ட மோதல், வன்முறையாக உருமாறியது. இதில், 60-க்கும் மேற்பட்டோர் ஒரு சில மாதங்களில் கொல்லப்பட்டனர். தொடர்ந்து, மாநிலத்தில் ஜனாதிபதி ஆட்சி அமல்படுத்தப்பட்டது.
ராணுவம் வரவழைக்கப்பட்டு நிலைமை கட்டுக்குள் கொண்டு வரப்பட்டது. இதன்பின்னர், அமலில் இருந்த ஜனாதிபதி ஆட்சி கடந்த ஆண்டு விலக்கிக்கொள்ளப்பட்டது. ஒய்.கே. சிங் முதல்-மந்திரியாக பதவியேற்றார்.
எனினும், 3 ஆண்டுகளாக தொடர்ந்து நடந்து வந்த வன்முறையால் இதுவரை 306 பேர் பலியாகி உள்ளனர். இதனை சட்டசபையில் அரசு உறுதிப்படுத்தியது.
வன்முறையால் பாதிக்கப்பட்ட மணிப்பூரில் பயங்கரவாதிகள், ஆயுதக்குழுக்களுக்கு எதிரான நடவடிக்கையை பாதுகாப்பு படையினர் தீவிரப்படுத்தி வருகின்றனர். அந்த வகையில் இம்பால் மேற்கு மாவட்டத்தில் 39 வயது நபர் ஒருவரை நேற்று முன்தினம் பாதுகாப்பு படையினர் கைது செய்தனர்.
இதேபோன்று பிஷ்னுபூர் மாவட்டத்தின் குவக்டா பகுதியை சேர்ந்தவரான 60 வயது நபர் ஒருவரும் சிக்கினார். கைது செய்யப்பட்ட இருவரும் தடை செய்யப்பட்ட பயங்கரவாத அமைப்புகளை சேர்ந்தவர்கள் என்று போலீசார் தெரிவித்தனர்.
இதில் 39 வயது நபர் பிங்குமணி சிங் என அடையாளம் காணப்பட்டார். 60 வயது நபர் முகமது அப்துல் ஹகீம் என தெரிய வந்துள்ளது. அவர்கள் மிரட்டி பணம் பறிக்கும் செயலில் ஈடுபட்டு வந்துள்ளனர். இதனை தொடர்ந்து, தேடுதல் மற்றும் பாதுகாப்பு பணியை படையினர் தீவிரப்படுத்தி உள்ளனர்.