தேசிய செய்திகள்

மேற்கு வங்காளத்தில் தேர்தல் அதிகாரியாக பணியாற்றிய மனோஜ் அகர்வால் தலைமை செயலாளராக நியமனம்

மனோஜ் அகர்வாலின் பதவிக்காலத்தில்தான் பெரிதும் எதிர்ப்புக்கு உள்ளான எஸ்.ஐ.ஆர். பணிகள் மேற்கொள்ளப்பட்டன.

கொல்கத்தா,

மேற்கு வங்காள மாநிலத்தில் நடந்த தேர்தலில் பாஜக அமோக வெற்றிபெற்றுள்ளது. கடந்த பதினைந்து வருடங்களாக அங்கு ஆட்சியில் இருந்த திரிணாமுல் காங்கிரஸ் கட்சி தோல்வியை சந்தித்து இருக்கின்றது. இதையடுத்து பா.ஜ.க.வின் சட்டமன்ற குழு தலைவராக சுவேந்து அதிகாரி அக்கட்சியின் எம்.எல்.ஏக்களால் தேர்வு செய்யப்பட்டார்.

இதையடுத்து கவர்னர் ஆர்.என்.ரவியை சந்தித்து ஆட்சி அமைக்க சுவேந்து அதிகாரி உரிமை கோரினார். பின்னர் ஆட்சி அமைக்க கவர்னர் அழைப்பு விடுத்த நிலையில், கடந்த 9-ந்தேதி மாநிலத்தின் புதிய முதல் மந்திரியாக சுவேந்து அதிகாரி பதவியேற்றார்.

இந்நிலையில், மேற்கு வங்கத்தின் தேர்தல் அதிகாரியாக பணியாற்றி வந்த மனோஜ் அகர்வாலை அம்மாநிலத்தின் தலைமைச் செயலாளராக முதல்-மந்திரி சுவேந்து அதிகாரி நியமித்துள்ளார். இவரது பதவிக்காலத்தில்தான் பெரிதும் எதிர்ப்புக்கு உள்ளான எஸ்.ஐ.ஆர். பணிகள் மற்றும் சட்டமன்ற தேர்தல் நடைபெற்றுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.