தேசிய செய்திகள்

ஸ்டெல்த் தொழில்நுட்பத்துடன் தயாரிப்பு: ‘மகேந்திரகிரி’ போர்க்கப்பல் இந்திய கடற்படையில் இணைப்பு

மத்திய அரசின் 'புராஜெக்ட் 17ஏ' திட்டத்தின் கீழ், எதிரி நாடுகளின் ரேடார்களில் சிக்காத 'ஸ்டெல்த்' தொழில்நுட்பத்துடன் கூடிய 7 அதிநவீன போர்க் கப்பல்கள் தயாரிக்கப்பட்டு வருகின்றன.

மும்பை,

மத்திய அரசின் 'புராஜெக்ட் 17ஏ' திட்டத்தின் கீழ், எதிரி நாடுகளின் ரேடார்களில் சிக்காத 'ஸ்டெல்த்' தொழில்நுட்பத்துடன் கூடிய 7 அதிநவீன போர்க் கப்பல்கள் தயாரிக்கப்பட்டு வருகின்றன. இதில் 6-வது போர்க்கப்பலான 'மகேந்திரகிரி' கட்டி முடிக்கப்பட்டு தயார் நிலையில் இருந்தது.

மும்பையில் உள்ள மசகான் கப்பல் கட்டும் தளத்தில் நேற்று முன்தினம் நடைபெற்ற விழாவில், இந்த பிரமாண்ட போர்க்கப்பல் இந்திய கடற்படையிடம் முறைப்படி ஒப்படைக்கப்பட்டது.

'மகேந்திரகிரி' போர்க்கப்பல் முற்றிலும் இந்தியாவிலேயே வடிவமைக்கப்பட்டு, முழுக்க முழுக்க உள்நாட்டு தொழில்நுட்பத்துடன் உருவாக்கப்பட்டுள்ளது. இதில் அதிநவீன ஏவுகணைகள், எதிரி நாடுகளின் நீர்மூழ்கி கப்பல்களை கண்டறியும் கருவிகள் மற்றும் நவீன துப்பாக்கிகள் பொருத்தப்பட்டுள்ளன. இது இந்திய கடல் எல்லையை பாதுகாப்பதில் மிக முக்கிய பங்கு வகிக்கும் என அதிகாரிகள் தெரிவித்தனர்.

சுயசார்பு இந்தியா திட்டத்தின் கீழ் உருவாக்கப்பட்டுள்ள இந்த போர்க்கப்பல் இந்திய பாதுகாப்பு துறையில் ஒரு மைல்கல்லாக கருதப்படுகிறது.