புதுடெல்லி,
வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தப்பணி மூலம் தலைமை தேர்தல் கமிஷனர் ஞானேஷ்குமார் வாக்குகளை திருடி விட்டதாக 'இந்தியா' கூட்டணி கட்சிகள் குற்றம்சாட்டி வருகின்றன. ஞானேஷ்குமார் பதவி விலகக்கோரி கடந்த 6-ந் தேதியில் இருந்து போராட்டங்கள் தலைநகர் டெல்லியில் விஸ்வரூபம் எடுத்து உள்ளன.
தேர்தல் கமிஷன் நோக்கி பேரணி, ஜந்தர் மந்தர் தர்ணா, மகாத்மா காந்தி நினைவிடத்தில் அமைதிப்போராட்டம் என 'இந்தியா' கூட்டணி, கரப்பான்பூச்சி ஜனதா கட்சி உள்ளிட்ட கட்சிகள் அடுத்தடுத்து போராட்டங்களை நடத்தி வருகிறார்கள். இதற்கிடையே ஜந்தர் மந்தரில் போராட்டம் நடத்த தடை விதிக்கப்பட்டுள்ளது.
ஜந்தர்மந்தரில் போராட தடை விதிக்கப்பட்டதற்கு கரப்பான் பூச்சி ஜனதா கட்சி நிறுவனர் அபிஜீத் திப்கே கண்டனம் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் 'எக்ஸ்' சமூக வலைத் ளப்பதிவில் கூறியிருப்பதாவது:-
ஜந்தர் மந்தரை அங்கீகரிக்கப்பட்ட போராட்டக் களங்களின் பட்டியலிலிருந்து நீக்கியிருப்பதிலிருந்தே நரேந்திர மோடியின் அச்சம் வெளிப்படுகிறது. ஜந்தர் மந்தர் இனி போராட்டக் களமாக இருக்காது என்றால், போராட்டங்கள் நின்றுவிடும் என்று அவர் கருதுகிறார். ஆனால் அது நடக்கப்போவதில்லை. இனி நாடு முழுவதும் பல 'ஜந்தர் மந்தர்கள்' உருவாகப்போகின்றன. ஒட்டுமொத்த நாடே ஜந்தர் மந்தராக மாறி போராட்ட களமாக வெடிக்கும்.
மத்தியில் ஆளும் சர்வாதிகாரியின் உண்மையான பிரச்சினை போராட்டம் நடக்கும் இடம் அல்ல. மக்கள் தங்களுக்கு எதிராக போராடுகிறார்கள் என்ற எண்ணமே அவருக்கு பிடிக்க வில்லை. அதன் வெளிப்பாடுதான் இந்த தடை உத்தரவு. எனவே, அடுத்தக்கட்டமாக அவர் இந்த நாட்டின் ஜனநாயகத்தையே தடை செய்ய துணிவார். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.