தேசிய செய்திகள்

மகாராஷ்டிராவில் ஆட்டோ, டாக்ஸி ஓட்டுநர்களுக்கு மராத்தி கட்டாயம்- சோதனையில் ஈடுபட குழு அமைப்பு

ஆட்டோ, டாக்சி டிரைவர்களுக்கு மராத்தி மொழி தெரிகிறதா என்பது குறித்த சோதனை மே 1-ந்தேதி முதல் மேற்கொள்ளப்படும் என்று மந்திரி பிரதாப் சர்நாயக் கூறினார்.

மராட்டியத்தில் வருகிற 1-ந்தேதி முதல் ஆட்டோ, டாக்சி டிரைவர்களுக்கு மராத்தி மொழி அடிப்படை அறிவு கட்டாயம் ஆக்கப்பட்டுள்ளது. இதற்கு புலம்பெயர்ந்த டிரைவர்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். அதேவேளையில் உள்ளூர் டிரைவர்கள் அரசுக்கு ஆதரவாக உள்ளனர்.இந்தநினைலையில் மாநில போக்குவரத்து துறை மந்திரி பிரதாப் சர்நாயக் நேற்று நிருபர்களிடம் அளித்த பேட்டியின் போது கூறியதாவது:

மராட்டியத்தில் தொழில் செய்ய விரும்புவோர், உள்ளூர் மொழியான மராத்தியை தெரிந்திருப்பது அவசியம். இதனை செயல்படுத்தும் விதமாக, மே 1-ந்தேதி முதல் ஆகஸ்ட் 15-ந்தேதி வரை மாநிலம் முழுவதும் உள்ள 59 வட்டார போக்குவரத்து அலுவலகங்களிலும் டிரைவர்களிடம் சிறப்பு சோதனை நடத்தப்படும். இதற்காக கூடுதல் போக்குவரத்து கமிஷனர் ரவீந்திர கெய்க்வாட் தலைமையில் தனிகுழு அமைக்கப்பட்டுள்ளது.

மிரா-பயந்தர் பகுதியில் சமீபத்தில் நடத்தப்பட்ட ஆய்வில், 3 ஆயிரத்து 443 ஆட்டோ டிரைவர்களில் 565 பேருக்கு மராத்தி தெரியவில்லை. ஆனால், அவர்கள் மராத்தி மொழியை கற்றுக்கொள்ள ஆர்வம் காட்டியுள்ளனர்.’மராத்தி கற்றுக்கொள்ள உதவிமராத்தி கற்க விரும்பும் டிரைவர்களுக்கு தேவையான புத்தகங்கள் மற்றும் மின்-பாடங்கள் ஆர்.டி.ஓ அலுவலகங்களிலேயே வழங்கப்படும்.

மராத்தி இலக்கிய அமைப்புகளின் ஒத்துழைப்புடன் டிரைவர்களுக்கு பயிற்சி அளிக்கப்படும். இந்த பயிற்சியை முடிப்பவர்களுக்கு சான்றிதழ் வழங்கப்படும். ஓட்டுநர் உரிமத்தை புதுப்பிக்கும்போது இந்த சான்றிதழ் சமர்ப்பிக்கப்பட வேண்டும். ஆகஸ்ட் 16-ந்தேதி இந்த சோதனை குறித்த முழுமையான அறிக்கை தாக்கல் செய்யப்படும். அதன் அடிப்படையில் அடுத்தகட்ட கொள்கை முடிவுகள் எடுக்கப்படும்.இவ்வாறு அவர் தெரிவித்தார்