தேசிய செய்திகள்

மகிழ்ச்சியும், வெற்றியும் நிறையட்டும்; பிரதமர் மோடி தமிழ் புத்தாண்டு வாழ்த்து

விசுவாவசு ஆண்டு நிறைவடைந்து பராபவ ஆண்டு பிறந்துள்ளது.

டெல்லி,

உலகம் முழுவதும் உள்ள தமிழர்களால் சித்திரை முதல் நாளான இன்று தமிழ் புத்தாண்டு கொண்டாடப்பட்டு வருகிறது. அதன்படி விசுவாவசு ஆண்டு நிறைவடைந்து பராபவ ஆண்டு பிறந்துள்ளது. தமிழ் புத்தாண்டையொட்டி தமிழகத்தில் உள்ள கோவில்களில் சிறப்பு வழிபாடுகள் நடைபெற்று வருகிறது. பொதுமக்கள் கோவில்களுக்கு சென்று சாமி தரிசனம் செய்து வருகின்றனர்.

இந்நிலையில், பிரதமர் மோடி தமிழ் புத்தாண்டு வாழ்த்து தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்ட எக்ஸ் தள பதிவில்,

புனிதமான புத்தாண்டு தினத்தையொட்டி இனிய நல்வாழ்த்துகள். இந்த ஆண்டு முழுவதும் மகிழ்ச்சியும், வெற்றியும், நல்ல ஆரோக்கியமும் நிறைந்திருக்க நான் பிரார்த்திக்கிறேன். சிறப்புமிக்க இந்த நாள் புதுப்பித்தல், நம்பிக்கை மற்றும் புதிய தொடக்கங்களின் கொண்டாட்டமாகும். இது தமிழ்ப் பண்பாட்டின் பெருமையைப் போற்றும் ஒரு தருணமாகும். அதன் இலக்கியம், இசை, கலை, தத்துவம், பக்தி ஆகியவற்றின் வளமான பாரம்பரியம் உலகெங்கிலும் உள்ள மக்களுக்குத் தொடர்ந்து உத்வேகம் அளிக்கிறது.

சிறப்புமிக்க இந்த நாள் நமது சமூகத்தில் ஒற்றுமை உணர்வை மேலும் வளர்க்கட்டும். மகத்தான தமிழ் பண்பாட்டால் உத்வேகம் பெற்று, நாம் வெற்றியின் புதிய சிகரங்களை அடைவதோடு, இயற்கையுடனான நமது பிணைப்பையும் ஆழப்படுத்திக் கொள்வோம்’ இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.