புதுடெல்லி,
காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி இந்து கோயில்களுக்கு வழிபாடு நடத்துவதை வழக்கமாக கொண்டிருந்தார். இந்நிலையில் இந்துக்கள் புனித தலமாக கருதும் கைலாஷ் மானசாரோவர் யாத்திரைக்கு செல்ல ராகுல் விருப்பம் தெரிவித்து மத்திய அரசின் வெளியுறவுத்துறை அமைச்சகத்திடம் விண்ணப்பித்துள்ளதாக கூறப்பட்டது.
இதனிடையே சாதாரணமாக பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு வழங்கப்படும் சிறப்பு அனுமதிக்கு விண்ணப்பித்துள்ளதாகவும் காங்கிரஸ் கட்சி வட்டாரங்கள் தெரிவித்தன. ஆனால் அவரது விண்ணப்பத்திற்கு இதுவரை பதில் இல்லை என கூறப்பட்டு வந்தது.
இந்தநிலையில் இது குறித்து வெளியுறவுத்துறை அமைச்சகம் கூறியிருப்பதாவது:
கைலாஷ் மானசரோவர் யாத்ரா இம் மாதம் 8-ம் தேதி துவங்கி வரும் செப்டம்பர் மாதம் 8-ம் தேதி வரையில் நடைபெற உள்ளது. முன்னதாக யாத்திரை செல்வதற்காக மத்திய அரசால் கடந்த பிப்ரவரி மாதம் 21 விண்ணப்பம் வெளியிடப்பட்டுள்ளது. மார்ச்23-ம் தேதி கடைசி நாள் என குறிப்பிட்டிருந்தது.
கைலாஷ் மானசரோவர் யாத்ரா பயணம் மேற்கொள்வதற்கு இரண்டு வழிகள் உள்ளது. ஒன்று அரசாங்கம் ஏற்பாடு செய்கிறது. மற்றொன்று தனியார் ஆப்ரேட்ர்கள் மூலம் அழைத்து செல்லப்படுகிறது.
அரசு மூலமாக பயணம் செய்பவர்கள் லாட்டரி முறையில் பதிவு செய்யவேண்டும். அவ்வாறு ராகுல்காந்தி அரசாங்கம் பதிவேட்டில் பதிவு செய்து இருந்தால் அரசாங்கம் அவரை நிச்சயமாக யாத்திரை செல்ல அனுமதி வழங்கி இருக்கும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.