பெங்களூரு
இந்திய தலைமை நீதிபதியை நாளை சந்தித்து பேசுவோம் என காங்கிரஸ் தலைவர் கார்கே பேட்டியின்போது கூறினார்.
காங்கிரஸ் கட்சியின் தலைவர் மற்றும் மாநிலங்களவை எதிர்க்கட்சி தலைவரான மல்லிகார்ஜுன கார்கே, கர்நாடகாவின் பெங்களூரு நகரில் செய்தியாளர்களிடம் இன்று அளித்த பேட்டியின்போது, தேர்தல் ஆணையத்தின் சுயாட்சி தன்மையை மத்திய அரசு குழிதோண்டி புதைத்து விட்டது. வாக்குகள் திருடப்பட்டு விட்டன என்றார்.
தொடர்ந்து அவர், மக்களவை எதிர்க்கட்சி தலைவர் ராகுல் காந்தியும், நானும் இந்திய தலைமை நீதிபதிக்கு கடிதம் ஒன்றை முறைப்படி எழுதியிருக்கிறோம். அவரை நாளை சந்திக்க உள்ளோம். அதற்காக நேரம் கேட்டிருக்கிறோம் என்றார். அவரிடம் சூழ்நிலைகளை பற்றி எடுத்து கூறுவோம். நாட்டில் ஜனநாயகத்தின் இன்றைய நிலைமையை பற்றி அவரிடம் தெரிவிப்போம் என்றார்.
அவரிடம் மிக பணிவுடன் எங்களுடைய கோரிக்கையை வைப்போம் என்றார். தலைமை தேர்தல் ஆணையம் என்பது ஓர் அரசியல் சாசன அமைப்பாகும். சுதந்திரத்துடன் செயல்பட கூடியது. முடிவுகளையும் எடுக்க முடியும். ஆனால், ஆணையத்தின் 2 உறுப்பினர்கள் சுதந்திர முடிவுகளை எடுக்க அவர் அனுமதிக்கவில்லை என ஞானேஷ் குமார் மீது குற்றச்சாட்டு கூறினார்.
நாடு முழுவதும் வாக்காளர் பட்டியலில் சிறப்பு தீவிர திருத்தப்பணி (எஸ்.ஐ.ஆர்.) மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இதில், ஒவ்வொரு மாநிலத்திலும் லட்சக்கணக்கான பேரின் பெயர்கள் நீக்கம் செய்யப்பட்டு உள்ளன. ஏறக்குறைய 13 கோடிக்கும் மேற்பட்ட வாக்காளர்கள் நீக்கப்பட்டு உள்ள சூழலில், உரிய முறைகளின்படியே இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது என்று இந்திய தலைமை தேர்தல் ஆணையம் விளக்கம் அளித்துள்ளது.
எனினும், இந்திய தலைமை தேர்தல் ஆணையாளர் ஞானேஷ் குமார், மற்ற இரு ஆணையாளர்களின் ஆலோசனைகளை கவனத்தில் கொள்ளாமல் வாக்காளர் பட்டியல் தீவிர திருத்தப்பணியில் தன்னிச்சையாக செயல்பட்டதாக புகார்கள் எழுந்தன. இந்த நீக்கத்திற்கு அவரது அரசு சார்பு நடவடிக்கைகளே காரணம் எனக்கூறி எதிர்க்கட்சியினர், அவரை பதவி விலக வலியுறுத்தி வருகிறார்கள். தவிர, பல்வேறு அமைப்பினர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.