தேசிய செய்திகள்

நிதி மந்திரியுடன் சந்திப்பு: முதல்-அமைச்சர் விஜய் முன்வைத்த கோரிக்கைகள் என்னென்ன..?

கோவை, மதுரை உள்ளிட்ட நகரங்களில் மெட்ரோ ரெயில் திட்டங்களை செயல்படுத்த தேவையான நிதி ஒதுக்கீடு செய்யுமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.

புதுடெல்லி,

மத்திய நிதிமந்திரி நிர்மலா சீதாராமனை, புதுடெல்லியில் தமிழ்நாடு முதல்-அமைச்சர் ஜோசப் விஜய் சந்தித்துப் பேசினார். அப்போது நிதிமந்திரியிடம் பல்வேறு கோரிக்கைகளை முதல்-அமைச்சர் விஜய் முன்வைத்தார்.

இதுதொடர்பாக செய்தி மக்கள் தொடர்புத்துறை வெளியிடப்பட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது:-

மத்திய நிதிமந்திரி நிர்மலா சீதாராமன் அவர்களை இன்று (27.05.2026) புதுடெல்லியிலுள்ள அவரது அலுவலகத்தில், தமிழ்நாடு முதல்-அமைச்சர் ஜோசப் விஜய் அவர்கள் மரியாதை நிமித்தமாக சந்தித்துப் பேசினார்.

நெடுஞ்சாலைகள், ரெயில்வே திட்டங்கள் - நிதி ஒதுக்கீடு

இச்சந்திப்பின்போது, விரைவான வளர்ச்சியைப் பெற்றுவரும் மாநிலமாக தமிழ்நாடு திகழ்ந்து வருகிறது என்றும், இத்தகைய வளர்ச்சியை மேலும் ஊக்குவிக்கும் வகையில், முக்கிய உட்கட்டமைப்புத் திட்டங்களில் முதலீடு செய்வது இன்றியமையாதது என்பதால், தமிழ்நாட்டின் வளர்ச்சிக்குத் தேவையான துறைமுகங்கள், நெடுஞ்சாலைகள், ரெயில்வே திட்டங்கள், தொழில் வழித்தடங்கள் ஆகியவற்றிற்கு முன்னுரிமை அளித்து நிதி ஒதுக்கீடு செய்திட வேண்டுமென்று மாண்புமிகு தமிழ்நாடு முதல்-அமைச்சர் அவர்கள் கேட்டுக்கொண்டார்.

மெட்ரோ ரெயில் திட்டங்கள்

தமிழ்நாட்டின் வலுவான கல்விச் சூழலை மேலும் வலுப்படுத்த, தேசிய முக்கியத்துவம் வாய்ந்த கல்வி நிறுவனங்களை (Institutes of National Importance) தமிழ்நாட்டில் நிறுவிடவும், தமிழ்நாட்டின் பொருளாதாரத்திலும், தொழில் வளர்ச்சியிலும் முக்கியப் பங்காற்றி வரும் ஓசூர், கோயம்புத்தூர் மற்றும் மதுரை ஆகிய நகரங்களின் பொதுப் போக்குவரத்தினை மேம்படுத்திடத் தேவையான மெட்ரோ ரெயில் திட்டங்களைச் செயல்படுத்துவதற்குத் தேவையான நிதி ஒதுக்கீடு செய்திடுமாறும் மத்திய நிதிமந்திரி அவர்களை தமிழ்நாடு முதல்-அமைச்சர் அவர்கள் கேட்டுக்கொண்டார்.

இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.