தேசிய செய்திகள்

மேகதாது அணை விவகாரத்தில் கர்நாடக அரசுக்கு பின்னடைவு: விரிவான திட்ட அறிக்கை நிராகரிப்பு

கர்நாடக அரசு சமர்ப்பித்துள்ள விரிவான திட்ட அறிக்கையை மத்திய நீர்வள ஆணையம் திருப்பி அனுப்பியுள்ளதாக தெரியவந்துள்ளது.

புதுடெல்லி,

மேகதாது அணை கட்டும் விவகாரத்தில், கர்நாடக அரசு தாக்கல் செய்த விரிவான திட்ட அறிக்கையை மத்திய நீர்வள ஆணையம் நிராகரித்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. இது கர்நாடக அரசுக்கு பின்னடைவாக பார்க்கப்படுகிறது.

மேகதாதுவில் புதிய அணை

கர்நாடகா மற்றும் தமிழ்நாடு இடையே பாயும் காவிரி ஆற்றின் குறுக்கே கர்நாடகாவில் ஏற்கனவே ஹேரங்கி, ஹேமாவதி, கபினி, கிருஷ்ணராஜசாகர் ஆகிய 4 அணைகள் உள்ளன. தற்போது, 5-வதாக மேகதாது எனும் இடத்தில் புதிய அணையை கட்ட அம்மாநில அரசு முயற்சி மேற்கொண்டு வருகிறது.

அங்குள்ள ராமநகரம் மாவட்டம் கனகபுரா அருகே காவிரி மற்றும் அர்க்காவதி ஆகிய ஆறுகள் இணையும் பகுதியில் இந்த அணையை ரூ.9 ஆயிரம் கோடி மதிப்பில் கட்ட திட்டமிட்டுள்ளது.

விரிவான திட்ட அறிக்கை

இந்த அணையின் கொள்ளளவு 67.14 டி.எம்.சி. ஆகும். இது ஏனைய 4 அணைகளையும்விட அதிக கொள்ளளவு கொண்டதாகும். மேகதாது அணையும் கட்டி முடிக்கப்பட்டால், கர்நாடகாவில் காவிரிப் படுகை அணைகளின் எண்ணிக்கை 5 ஆக உயர்ந்துவிடும். 171.73 டி.எம்.சி. தண்ணீரையும் சேமித்து வைக்க முடியும்.

இந்த நிலையில், மேகதாதுவில் புதிய அணை கட்டுவது தொடர்பாக, விரிவான திட்ட அறிக்கையை தயாரித்த கர்நாடக அரசு கடந்த மாதம் (ஜூன்) 7-ந் தேதி மத்திய நீர்வளத் துறை ஆணையத்தின் தலைமை பொறியாளருக்கு அனுப்பிவைத்தது.

மத்திய நீர்வள ஆணையம் நிராகரித்தது

அந்த விரிவான திட்ட அறிக்கையில், "மேகதாதுவில் அணை கட்டப்பட்டால்தான் காவிரி நடுவர் மன்றத் தீர்ப்பின்படி தமிழகத்திற்கு உரிய அளவு தண்ணீர் வழங்க முடியும். மேலும், பெங்களூருவுக்கு குடிநீர் வழங்க 16.1 டி.எம்.சி. தண்ணீர் எடுக்கப்படும். அதுவும் காவிரி நடுவர் மன்றத் தீர்ப்பில் கர்நாடகத்திற்கு ஒதுக்கப்பட்ட அளவுக்குள்ளேயே தண்ணீர் எடுக்கப்படும்" என்று கர்நாடக அரசு கூறியுள்ளது.

இந்த தகவல்கள் முன்னுக்குப்பின் முரணாக இருப்பதாக கூறி, கடந்த மாதம் (ஜூன்) 29-ந் தேதியே மத்திய நீர்வள ஆணையம், கர்நாடக அரசின் விரிவான திட்ட அறிக்கையை திருப்பி அனுப்பியுள்ளது. இந்த தகவல், பூவுலகின் நண்பர்கள் அமைப்பின் மூலம் வெளிச்சத்துக்கு வந்துள்ளது.

காரணம் என்ன?

இந்த அமைப்பு, மேகதாது அணை குறித்து விரிவான திட்ட அறிக்கையை மத்திய நீர்வளத் ஆணையத்திடமும், காவிரி நதிநீர் ஆணையத்திடமும் கர்நாடக அரசு சமர்ப்பித்துள்ளது குறித்து தகவல் அறியும் உரிமை சட்டத்தின் கீழ் கேள்வி எழுப்பியுள்ளது.

அதற்கு, கர்நாடக அரசு சமர்ப்பித்துள்ள விரிவான திட்ட அறிக்கையை மத்திய நீர்வள ஆணையம் திருப்பி அனுப்பியுள்ளதாக பதில் கிடைத்துள்ளது. அதற்கு காரணமாக, "காவிரி நீர் தகராறு தீர்ப்பாயத்தின் தீர்ப்பு மற்றும் சுப்ரீம் கோர்ட்டின் 2018-ம் ஆண்டு தீர்ப்புக்கு ஒத்துப்போகவில்லை" என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், புதிதாக விரிவான திட்ட அறிக்கை தயாரித்து வழங்குமாறும் கர்நாடக அரசுக்கு மத்திய நீர்வள ஆணையம் உத்தரவிட்டுள்ளது.

கர்நாடக அரசுக்கு பின்னடைவு

இது மேகதாது அணை கட்டும் விவகாரத்தில் கர்நாடக அரசுக்கு பின்னடைவாக பார்க்கப்படுகிறது. அதே நேரத்தில், தமிழக அரசும் சட்ட வல்லுநர்களுடன் ஆலோசித்து மேகதாது அணை விவகாரத்தில் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதே டெல்டா மாவட்ட விவசாயிகளின் கோரிக்கையாக உள்ளது.