தேசிய செய்திகள்

மேகதாது அணை விவகாரம்: மறு ஆய்வு கோரிய தமிழக அரசின் மனு தள்ளுபடி

கடந்த நவம்பர் 13-ந்தேதியிட்ட தீர்ப்பை மறுஆய்வு செய்ய வேண்டிய அவசியம் எழவில்லை என்று சுப்ரீம் கோர்ட் கூறியுள்ளது.

புதுடெல்லி

கர்நாடக அரசு காவிரியின் குறுக்கே மேகதாது என்ற இடத்தில் அணை கட்ட முயற்சித்து வருகிறது. இதற்கு தமிழகம் எதிர்ப்பு தெரிவித்து வருகிறது. மேகதாது அணை திட்ட விவகாரத்தில் விரிவான திட்ட அறிக்கையை தயாரிக்க மட்டுமே கர்நாடக அரசுக்கு மத்திய நீர்வள ஆணையம் அனுமதித்துள்ளது என்று கூறி வழக்கை முடித்து வைத்து தீர்ப்பு கூறியது.

இந்த தீர்ப்பை மறுஆய்வு செய்யக் கோரி தமிழ்நாடு அரசின் சார்பில் வக்கீல் மிஷா ரோத்தகி மனு தாக்கல் செய்தார். இந்த மனுவை தலைமை நீதிபதி சூர்யகாந்த், நீதிபதிகள் கே.வினோத் சந்திரன், விபுல் எம். பஞ்சோலி ஆகியோர் அடங்கிய அமர்வு கடந்த ஏப்ரல் 15-ந்தேதி விசாரித்து தீர்ப்பு கூறியது. இந்த தீர்ப்பு தொடர்பான விவரம் நேற்றுதான் சுப்ரீம் கோர்ட்டு இணையத்தில் வெளியானது.  

சுப்ரீம் கோர்ட்டு கூறிய தீர்ப்பில், ‘மேகதாது அணை திட்டத்துக்கு எதிரான மனுவை தள்ளுபடி செய்த தீர்ப்பை மறுஆய்வு செய்யக் கோரிய மனுவை திறந்த கோர்ட்டில் விசாரிக்க வேண்டும் என்ற தமிழ்நாடு அரசின் கோரிக்கை நிராகரிக்கப்படுகிறது. இந்த திட்டத்துக்கு எதிரான மனுவை தள்ளுபடி செய்த சுப்ரீம் கோர்ட்டின் கடந்த நவம்பர் 13-ந்தேதியிட்ட தீர்ப்பை மறுஆய்வு செய்ய வேண்டிய அவசியம் எழவில்லை. எனவே மறு ஆய்வு மனு தள்ளுபடி செய்யப்படுகிறது’ என்று தெரிவித்துள்ளது.