Image Credits: AI 
தேசிய செய்திகள்

இந்தியாவில் 1 லட்சத்து 60 ஆயிரம் கணக்குகள் முடக்கம்- மெட்டா நிறுவனம் தகவல்

இந்தியாவில், கடந்த 6 மாதங்களில் மட்டும் 1 லட்சத்து 60 ஆயிரம் இன்ஸ்டாகிராம் கணக்குகள் முடக்கப்பட்டுள்ளதாக மெட்டா நிறுவனம் தெரிவித்துள்ளது.

புதுடெல்லி,

இன்ஸ்டாகிராம் செயலியில் குழந்தைகள் ஆபாசத்தை ஊக்குவிப்பது தொடர்பான விளம்பரங்கள் வெளியாவதாக வந்த புகாரை அடுத்து, அதன் தாய் நிறுவனமான 'மெட்டா'வுக்கு மத்திய அரசு நோட்டீஸ் அனுப்பியது. இதற்கு விளக்கம் அளித்து மெட்டா நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

குழந்தைகள் சுரண்டல் என்பது ஒரு கொடூரமான குற்றமாகும். எங்கள் தளங்களில் இதுபோன்ற தவறான செயல்களை தடுக்க தீவிரமாகப் போராடி வருகிறோம். விதிகளை மீறிய விளம்பரங்களும், கணக்குகளும் ஏற்கனவே முடக்கப்பட்டுள்ளன. கடந்த ஆண்டில் மட்டும் உலகம் முழுவதும் 40 லட்சத்திற்கும் அதிகமான சந்தேகத்திற்குரிய கணக்குகளும், 3.6 கோடி பதிவுகளும் செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பம் மூலம் நீக்கப்பட்டுள்ளன. இந்தியாவில், கடந்த 6 மாதங்களில் மட்டும் 1 லட்சத்து 60 ஆயிரம் கணக்குகள் முடக்கப்பட்டுள்ளன. நாங்கள் வேண்டுமென்றே இதுபோன்ற விளம்பரங்களை அனுமதிப்பதாக கூறுவது முற்றிலும் தவறானது. பாதுகாப்பை பலப்படுத்த தொடர்ந்து நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. இவ்வாறு மெட்டா நிறுவனம் தெரிவித்துள்ளது.