தேசிய செய்திகள்

மத்திய கிழக்கு போர் பதற்றம்: பிரதமர் மோடி தலைமையில் அவசர ஆலோசனைக் கூட்டம்

போரின் விளைவாக பல்வேறு நாடுகளில் பெட்ரோல், டீசல் மற்றும் சமையல் கியாஸ் விலை உயர்ந்து வருகிறது.

புதுடெல்லி,

அமெரிக்காவும், இஸ்ரேலும் இணைந்து ஈரான் மீது கடந்த பிப்ரவரி 28-ந்தேதி தாக்குதலை தொடங்கியதை அடுத்து, இரு தரப்புக்கும் இடையேயான போர் ஒரு மாதத்திற்கும் மேலாக நீடித்து வருகிறது. போர் காரணமாக ஹார்முஸ் ஜலசந்தியை ஈரான் முடக்கி உள்ளது. இதனால் சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை உயர்ந்தது.

இதன் விளைவாக பல்வேறு நாடுகளில் பெட்ரோல், டீசல், சமையல் கியாஸ் விலை உயர்ந்து வருகிறது. இருப்பினும் இந்தியாவில் பொதுத்துறை எண்ணெய் நிறுவனங்கள் பெட்ரோலிய பொருட்களின் விலையை உயர்த்தவில்லை. மேலும், பெட்ரோல்-டீசல் மீதான சுங்க வரியை லிட்டருக்கு ரூ.10 குறைத்து மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது.

இந்த நிலையில், மத்திய கிழக்கில் ஏற்பட்டுள்ள போர் பதற்றம் குறித்தும், சாமானிய மக்களுக்கான உணவு, எரிசக்தி மற்றும் எரிபொருள் உள்ளிட்ட அத்தியாவசியத் தேவைகளின் இருப்பு தொடர்பாகவும் பிரதமர் மோடி தலைமையில் இன்று மூத்த மந்திரிகள் குழுவுடன் அவசர ஆலோசனைக் கூட்டம் நடைபெற உள்ளது. பிரதமர் மோடி தேர்தல் பிரசாரத்திற்காக அசாம் சென்றுள்ள நிலையில், அவர் டெல்லி திரும்பியவுடன் ஆலோசனைக் கூட்டத்தில் பங்கேற்க உள்ளார்.

இந்த கூட்டத்தில் மத்திய மந்திரிகள் ராஜ்நாத் சிங், அமித்ஷா, ஜெய்சங்கர், நிர்மலா சீதாராமன், பியூஷ் கோயல், சிவராஜ் சிங் சவுகான், ஜே.பி.நட்டா, அஷ்வினி வைஷ்ணவ், மனோகர் லால் கட்டார், பிரகலாத் ஜோஷி, ராம்மோகன் நாயுடு, ஹர்தீப் சிங் பூரி உள்ளிட்டோர் கலந்து கொள்ள உள்ளனர்.