பெங்களூரு,
கர்நாடகாவில் பால் விலை லிட்டருக்கு ரூ.8 உயர்த்தி அம்மாநில அரசு அறிவித்துள்ளது.
கர்நாடகாவில் பால் உற்பத்தியாளர்களுக்கு ஆதரவளிக்கும் வகையில், பால் விலையை லிட்டருக்கு ரூ.8 உயர்த்த மாநில அமைச்சரவை முடிவு செய்துள்ளது. இந்த விலை உயர்வு நவம்பர் 1-ம் தேதி முதல் அமலுக்கு வரும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் பால் உற்பத்தியாளர்களுக்கு லிட்டருக்கு ரூ.7 கூடுதலாகவும், பால் கூட்டுறவு சங்கங்களுக்கு ரூ.1 கூடுதலாகவும் கிடைக்கும் என மந்திரி கிருஷ்ண பைரே கவுடா கூறியுள்ளார்.
கர்நாடகாவில் பால் உற்பத்திச் செலவுகள் மற்றும் விவசாயிகள் எதிர்கொள்ளும் நெருக்கடிகளைக் கருத்தில் கொண்டு, பால் கொள்முதல் விலையை உயர்த்த வேண்டும் என்ற கோரிக்கை வலுத்து வந்தது. பால் உற்பத்தியாளர்கள் போராட்டத்தில் ஈடுபட்டதுடன், பால் கூட்டுறவு சங்கங்களும் விலை உயர்வை வலியுறுத்தின.
மேலும், கர்நாடக சட்ட மேலவையில் அனைத்துக் கட்சி உறுப்பினர்களும் விவசாயிகளுக்கு ஆதரவாக நடவடிக்கை எடுக்க வேண்டும் எனக் கோரிக்கை விடுத்திருந்தனர். இதையடுத்து, முதல்-அமைச்சர் தலைமையில் நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் பால் விலையை லிட்டருக்கு ரூ.8 உயர்த்த ஒருமனதாக முடிவு எடுக்கப்பட்டது.
பால் உற்பத்தியாளர்களின் பிரதிநிதிகள், முதல்-மந்திரி மற்றும் சம்பந்தப்பட்ட மந்திரிகளை சந்தித்து லிட்டருக்கு குறைந்தபட்சம் ரூ.10 உயர்வு வழங்க வேண்டும் என வலியுறுத்தினர்.
ஆனால், அந்த அளவுக்கு விலையை உயர்த்துவது சாத்தியமில்லை எனக் கருதிய அரசு, லிட்டருக்கு ரூ.8 உயர்வு வழங்க முடிவு செய்துள்ளது.
இந்த விலை உயர்வின் மூலம் விவசாயிகளுக்கு போதிய லாபம் கிடைக்கும் என்று கூறப்படுகிறது.
தற்போதைய கொள்முதல் விலை: லிட்டருக்கு ரூ.35
புதிய கொள்முதல் விலை: லிட்டருக்கு ரூ.42
அரசின் ஊக்கத்தொகை: லிட்டருக்கு ரூ.5
ஊக்கத்தொகையுடன் மொத்தம்: லிட்டருக்கு ரூ.47
அரசு வழங்கி வரும் ரூ.5 ஊக்கத்தொகையில் எந்த மாற்றமும் இல்லை. புதிய விலை உயர்வு மூலம் லட்சக்கணக்கான விவசாயக் குடும்பங்கள் பயனடைவார்கள் என மந்திரி கிருஷ்ண பைரே கவுடா கூறியுள்ளார்.