மதுபாட்டில்களை பொதுமக்கள் அள்ளிச் சென்ற காட்சி 
தேசிய செய்திகள்

பீகாரில் மினி லாரி விபத்து: மதுபாட்டில்களை அள்ளிச்சென்ற பொதுமக்கள்!

கடந்த 2016-ம் ஆண்டு முதல் பீகார் மாநிலத்தில் முழு மதுவிலக்கு சட்டம் அமலில் உள்ளது.

பாட்னா,

பீகாரில் மதுபாட்டில்களை கடத்தி சென்ற மினி லாரி விபத்துக்குள்ளானது. இதையடுத்து அங்கிருந்த பொதுமக்கள் போட்டி போட்டுக்கொண்டு அந்த பாட்டில்களை எடுத்து சென்றனர்.

விபத்து

பீகார் மாநிலம், அராரியா மாவட்டத்தில் உள்ள ராணிகஞ்ச் பகுதியில் அசாம் மாநிலப் பதிவு எண் கொண்ட மினி லாரி ஒன்று நேற்று (வெள்ளிக்கிழமை) சென்று கொண்டிருந்தது. கர்காட் சுங்கச்சாவடி அருகே வந்தபோது, எதிர்பாராதவிதமாக ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்த லாரி, சாலை தடுப்பானில் மோதி பலத்த சேதமடைந்தது. விபத்து நடந்த உடனே, லாரியின் ஓட்டுநரும் கிளீனரும் வாகனத்தை அங்கேயே போட்டுவிட்டு தப்பியோடினர்.

ரகசிய கடத்தல் அம்பலம்

கடந்த 2016-ம் ஆண்டு முதல் பீகார் மாநிலத்தில் முழு மதுவிலக்கு சட்டம் அமலில் உள்ளது. இந்நிலையில், விபத்துக்குள்ளான அந்த லாரியின் மேற்புறத்தில் சிமெண்ட் மூட்டைகள் அடுக்கப்பட்டிருந்தன. ஆனால், ஓட்டுநர் தப்பியோடியதால் சந்தேகமடைந்த பொதுமக்கள் உள்ளே சோதித்துப் பார்த்தபோது, சிமெண்ட் மூட்டைகளுக்கு அடியில் ரகசியமாக நூற்றுக்கணக்கான வெளிநாட்டு மதுபானப் பாட்டில்கள் பெட்டிகளில் கடத்தி வரப்பட்டது தெரியவந்தது.

பொதுமக்கள் செய்த செயல்

லாரியில் மதுபாட்டில்கள் இருப்பதை அறிந்த அப்பகுதி கிராம மக்கள், விபத்தை மீட்க உதவாமல், மதுபாட்டில்களை போட்டி போட்டுக்கொண்டு அள்ளிச் செல்லத் தொடங்கினர். சிறுவர்கள், இளைஞர்கள் முதல் முதியவர்கள் மற்றும் பெண்கள் வரை அனைவரும் கைகளில் மதுபாட்டில்களையும், பெட்டிகளையும் தூக்கிக்கொண்டு தப்பியோடினர். இந்த காட்சிகள் அடங்கிய வீடியோ சமூக வலைதளங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது.

போலீசார் நடவடிக்கை

தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த ராணிகஞ்ச் போலீசார், கூட்டத்தைக் கலைத்து விபத்துக்குள்ளான லாரியையும், அதில் மீதமிருந்த மதுபானங்களையும் பறிமுதல் செய்தனர். இதுகுறித்து சர்தார் எஸ்டிபிஓ சுஷில் குமார் கூறுகையில், "மதுபானங்கள் பறிமுதல் செய்யப்பட்டு விசாரணை தொடங்கப்பட்டுள்ளது.

சமூக வலைதளங்களில் வைரலாகும் வீடியோக்களைக் கொண்டு, மதுபாட்டில்களை திருடிச் சென்ற பொதுமக்களை அடையாளம் காணும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது" என்று தெரிவித்தார். இந்த சம்பவத்தால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

SCROLL FOR NEXT