தேசிய செய்திகள்

மத்திய மந்திரி மன்சுக் மாண்டவியாவுடன் அமைச்சர் ஆதவ் அர்ஜுனா சந்திப்பு

தமிழ்நாட்டை முன்னணி விளையாட்டு மாநிலமாக உயர்த்தும் நோக்கில் முக்கிய முன்மொழிவுத் திட்டங்களை அமைச்சர் ஆதவ் அர்ஜுனா முன்வைத்தார்.

புதுடெல்லி,

அமைச்சர் ஆதவ் அர்ஜூனா , இன்று டெல்லியில் மத்திய இளைஞர் நலன் மற்றும் விளையாட்டுத்துறை மந்திரி மன்சுக் மாண்டவியாவைச் சந்தித்தார். இந்த சந்திப்பின்போது தமிழ்நாட்டை இந்தியாவின் முன்னணி விளையாட்டு மாநிலமாக உயர்த்தும் நோக்கில் பல்வேறு முக்கிய முன்மொழிவுத் திட்டங்களை அமைச்சர் ஆதவ் அர்ஜுனா முன்வைத்தார். இதுதொடர்பாக வெளியிடப்பட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டிருப்பதாவது:-

முதல்-அமைச்சர் ஜோசப் விஜய்யின் தொலைநோக்குப் பார்வை மிக்க தலைமையின் கீழ், தமிழக அரசு விளையாட்டை ஒரு சக்திவாய்ந்த சமூக மாற்றக் கருவியாகக் கருதி செயலாற்றி வருகிறது. இளைஞர்களின் ஆற்றலை ஆக்கப்பூர்வமான வழியில் செலுத்தி, ஆரோக்கியமான வாழ்க்கை முறையை ஊக்குவித்து, சமூகத்தில் நேர்மறையான மாற்றத்தை உருவாக்குவதே அரசின் தலையாய நோக்கமாகும். 'போதைப்பொருள் இல்லாத தமிழகம்' என்ற உன்னத இலக்கை நோக்கிய பயணத்தில், தூய்மையான, நேர்மையான மற்றும் அறநெறி சார்ந்த விளையாட்டுக் கலாசாரத்தை வளர்த்தெடுப்பதில் தமிழக அரசு உறுதிபூண்டுள்ளது.

விளையாட்டின் மூலம் இளைய தலைமுறையினருக்கு அதிகாரமளித்து, அவர்களை நாளைய சாதனையாளர்களாக உருவாக்கும் பணியில் இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை முனைப்புடன் செயல்படுகிறது. ஒலிம்பிக், பாராலிம்பிக், ஆசிய விளையாட்டுப் போட்டிகள் உள்ளிட்ட முக்கிய சர்வதேச அரங்குகளில் தொடர்ச்சியான வெற்றிகளை ஈட்டி, உலகளாவிய விளையாட்டு வல்லரசாக இந்தியா உருவெடுக்கும் லட்சியத்திற்கு தமிழகம் முழு ஆதரவையும், பங்களிப்பையும் வழங்கும் என முதல்-அமைச்சர் தெரிவித்துள்ளார்.

அந்த வகையில், முதல்-அமைச்சரின் அறிவுறுத்தலுக்கிணங்க, பொதுப்பணி, நெடுஞ்சாலைகள் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை அமைச்சர் ஆதவ் அர்ஜுனா, இன்று டெல்லியில், மத்திய இளைஞர் நலன் மற்றும் விளையாட்டுத்துறை மந்திரி முனைவர் மன்சுக் மாண்டவியாவைச் சந்தித்தார்.

இந்த சந்திப்பின்போது தமிழ்நாட்டை இந்தியாவின் முன்னணி விளையாட்டு மாநிலமாக உயர்த்தும் நோக்கில் பல்வேறு முக்கிய முன்மொழிவுத் திட்டங்களை அமைச்சர் முன்வைத்தார். சர்வதேச மற்றும் தேசியப் போட்டிகளை வெற்றிகரமாக நடத்திய அனுபவத்தின் அடிப்படையில், 2029-ம் ஆண்டு தேசிய விளையாட்டுப் போட்டிகளை தமிழ்நாட்டில் நடத்திட வாய்ப்பளிக்க கோரிய முன்மொழிவினை இந்த சந்திப்பின்போது வழங்கப்பட்டது. இப்போட்டிகள் நடத்தப்படுவதால் தமிழ்நாட்டின் நீடித்த உள்கட்டமைப்பு மேம்பாட்டிற்கு வலுவான அடித்தளமாக இது அமையும் எனவும் தெரிவிக்கப்பட்டது.

மேலும், திருச்சி மாவட்டத்தில் 48 ஏக்கர் பரப்பளவில் அமையவுள்ள 'திருச்சி ஒலிம்பிக் அகாடமி' வளாகத்தில், தற்காப்புக் கலைகளுக்கான தேசிய முதன்மை நிலை மையம் அமைப்பதன் மூலம் விளையாட்டு மேம்பாட்டை மேலும் வலுப்படுத்த இயலும் என்பது குறித்தும் ஆலோசிக்கப்பட்டது. தமிழ்நாட்டின் 1,076 கி.மீ. நீள கடற்கரையையும், இளம் திறமையான விளையாட்டு வீரர்களின் சாதகமான அம்சங்களைக் கருத்தில் கொண்டு, நாகப்பட்டினம் மாவட்டத்தில் கடற்கரை விளையாட்டுகளுக்கான தேசிய முதன்மை நிலை மையம் அமைக்க முன்மொழியப்பட்டுள்ளது.

மிதிவண்டி போட்டிகளில் தமிழ்நாடு கொண்டுள்ள வலுவான வீரர்களின் திறனை கருத்தில் கொண்டு, கோயம்புத்தூர் மாவட்டத்தில் சர்வதேச தரத்திலான UCI அங்கீகாரம் பெற்ற உள்ளரங்க மிதிவண்டி தடம் 'வெலோட்ரோம்' மற்றும் தேசிய மிதிவண்டி உயர்செயல்திறன் மையம் அமைப்பது குறித்தும் ஆலோசிக்கப்பட்டது. தடகளத்தில் மாநிலத்தின் சாதனைகளைத் தக்கவைக்கவும், அடிப்படை அளவிலான வீரர்களை சர்வதேச அளவிற்கு உயர்த்தவும், புதுக்கோட்டை, தூத்துக்குடி, விழுப்புரம், திருவள்ளூர் மற்றும் கிருஷ்ணகிரி ஆகிய மாவட்டங்களில் சர்வதேச தரத்திலான 400 மீட்டர் செயற்கை ஓடுதளங்கள் அமைக்க திட்டமிடப்பட்டுள்ளது.

நீச்சல் போட்டிகளில் தேசிய மற்றும் சர்வதேச அளவில் இந்தியாவைப் பிரதிநிதித்துவப்படுத்தும் பல வீரர்களை தமிழ்நாடு உருவாக்கியுள்ளதால், கோயம்புத்தூர், செங்கல்பட்டு, திருவாரூர் மற்றும் திருப்பூர் மாவட்டங்களில் உலகத்தரம் வாய்ந்த நீச்சல் வளாகங்கள் அமைக்க முன்மொழியப்பட்டது. தமிழ்நாட்டில் உள்ளரங்க விளையாட்டுகளில் இளைஞர்களின் பங்கேற்பு அதிகரித்து வருவதால், கள்ளக்குறிச்சி, திருநெல்வேலி, ராணிப்பேட்டை மற்றும் கடலூர் ஆகிய மாவட்டங்களில் பல்நோக்கு உள்ளரங்க விளையாட்டு வளாகங்கள் அமைப்பது குறித்து ஆலோசிக்கப்பட்டது.

ஒலிம்பிக் விளையாட்டான 'ஏறு விளையாட்டு' பயிற்சிக்காக, தற்போதைய விளையாட்டுச் சூழல் மற்றும் உள்கட்டமைப்பு வசதிகளைக் கணக்கில் கொண்டு, சென்னையில் சர்வதேச தரத்திலான ஏறு விளையாட்டு பயிற்சி மையம் அமைக்க திட்டமிடப்பட்டுள்ளது. நாட்டிலேயே அதிக இளைஞர்களையும், வலுவான விளையாட்டு கலாசாரத்தையும் கொண்ட மாநிலங்களில் ஒன்றாக தமிழ்நாடு திகழ்வதால், தமிழ்நாட்டின் ஒவ்வொரு மாவட்டத்திலும் குறைந்தது 2 விளையாட்டுப் பிரிவுகளுக்கு முன்னுரிமை வழங்கி கூடுதலாக 'கேலோ இந்தியா மையங்கள்' மற்றும் 'கேலோ இந்தியா மாவட்ட மையங்களை' விரிவாக்கம் செய்ய இந்த ஆலோசனையின்போது வலியுறுத்தப்பட்டது.

தேசிய ஊக்கமருந்து தடுப்பு கழகத்துடன் (National Anti-Doping Agency) இணைந்து, ஆராய்ச்சி மற்றும் திறன் மேம்பாட்டிற்கான ஒரு தேசிய மையமாக செயல்படும் வகையில், தேசிய ஊக்கமருந்து தடுப்பு கல்வி மற்றும் விழிப்புணர்வு மையம் சென்னையில் அமைக்க முன்மொழியப்பட்டுள்ளது.

மேலும் மதுரை மாவட்டத்தில் ஏற்கனவே அமைந்துள்ள ஒலிம்பிக் அகாடமி மற்றும் உயர் செயல்திறன் மையங்களின் கட்டமைப்பை அடிப்படையாக கொண்டு, இந்தியா முழுவதும் உள்ள விளையாட்டு வீரர்களுக்கு ஒருங்கிணைந்த சேவைகளை வழங்கும் நோக்கில், தேசிய விளையாட்டு மையம், விளையாட்டு மருத்துவம், காயம் மீட்பு மற்றும் செயல்திறன் மேம்பாட்டு மையத்தை மதுரையில் அமைப்பது உள்ளிட்ட கோரிக்கைகள் அடங்கிய மனு இந்த சந்திப்பின்போது வழங்கப்பட்டது.

மத்திய இளைஞர் நலன் மற்றும் விளையாட்டுத்துறை மந்திரி மன்சுக் மாண்டவியா, விளையாட்டை ஊக்குவிக்கும் தமிழ்நாடு அரசின் முயற்சிகளை பாராட்டி, தனது முழுமையான ஆதரவையும் ஒத்துழைப்பையும் வழங்க உறுதியளித்தார். இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.