உத்தரப் பிரதேசம், பிகார், மராட்டியம், கர்நாடகம் ஆகிய 4 மாநில சட்ட மேலவைகளில் 28 இடங்களுக்கு தேர்தல் நடைபெற்றன. வாக்குச் சீட்டு முறையில் நடைபெற்ற இந்தத் தேர்தலில் மொத்தம் 28 ஆசிரியர்கள், பட்டதாரிகள் தொகுதிகளுக்கு கடந்த வெள்ளிக்கிழமை தேர்தல் நடைபெற்றது. இந்தத் தேர்தலில் பதிவான வாக்குகளை எண்ணும் பணி கடந்த நேற்று முன் தினம் தொடங்கியது. இதில், காங்கிரஸ் கட்சி பெரும் பின்னடைவை சந்தித்தது. கர்நாடகத்தில் ஆளும் கட்சியாக இருக்கும் காங்கிரஸ் நான்கு தொகுதிகளிலும் தோல்வியைத் தழுவியது. உத்தர பிரதேசம், பீகாரில் தோல்வி அடைந்தது.வாக்குச்சீட்டு முறையில் நடைபெற்ற தேர்தலிலும் காங்கிரஸ் தோல்வி அடைந்ததாக பாஜக கிண்டல் செய்து இருந்தது.
இந்த நிலையில், ஆர்எஸ்எஸ் கோட்டையாகக் கருதப்படும் நாக்பூர் பிரிவு பட்டதாரிகள் தொகுதியில் காங்கிரஸ் வென்றுள்ளது. காங்கிரஸ் வேட்பாளர் அபிஜீத் கோவிந்த்ராவ் வஞ்சாரி தொடர்ந்து 2-வது முறையாக வெற்றி பெற்றுள்ளார். கடந்த 2020-ம் ஆண்டு நடைபெற்ற தேர்தலிலும் வெற்றி பெற்ற வஞ்சாரி, இந்தத் தேர்தலிலும் தனது தொகுதியைத் தக்கவைத்துக் கொண்டுள்ளார்.
இந்தத் தேர்தலில் பா.ஜ.க. வேட்பாளரான முன்னாள் எம்.எல்.ஏ. சுதாகர் கோஹலே அவரை எதிர்த்துப் போட்டியிட்டார். வாக்கு எண்ணிக்கையின் முடிவில், வஞ்சாரி 67,231 வாக்குகளையும், கோஹலே 63,960 வாக்குகளையும் பெற்றனர். இதன்மூலம் 3,271 வாக்குகள் வித்தியாசத்தில் வஞ்சாரி வெற்றி பெற்றார். ஆர்.எஸ்.எஸ் தலைமையகம் அமைந்துள்ள நாக்பூர் தொகுதி, அதன் கோட்டையாக கருதப்படுகிறது. அங்கு பாஜகவே ஆதிக்கம் செலுத்தி வரும் நிலையில், எம்.எல்.சி தேர்தலில் காங்கிரசிடம் 2-வது முறையாக தோல்வியை தழுவியுள்ளது.