ஸ்ரீநகர்,
காஷ்மீரில் பயங்கரவாத செயல்களுக்கு பாகிஸ்தானில் இருந்து பணம் பிரிவினைவாதிகளுக்கு வழங்கப்பட்டு வருவது தொடர்பாக தேசிய புலனாய்வு பிரிவு விசாரணையை தீவிரப்படுத்தி வருகிறது. இதில் பலர் சிக்கி வருகிறார்கள். இதற்கிடையே பள்ளத்தாக்கு பகுதிகளில் லஷ்கர்-இ-தொய்பா, ஹிஸ்புல் முஜாகிதீன், ஜெய்ஷ் பயங்கரவாதிகளை பாதுகாப்பு படைகள் வேட்டையாடி வருகிறது. புல்வாமா மாவட்டம் ஹாரிபோரா கிராமத்தில் பயங்கரவாதிகள் நடமாட்டம் காணப்படுவதாக பாதுகாப்பு படைக்கு தகவல் கிடைத்தது. அதன்படி பாதுகாப்பு படையினர் பயங்கரவாதிகளை வேட்டையாடும் பணியில் ஈடுபட்ட போது இருதரப்பு இடையே துப்பாக்கி சண்டை தொடங்கியது.
துப்பாக்கி சண்டையில் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரை சேர்ந்த லஷ்கர்-இ-தொய்பா பயங்கரவாத இயக்கத்தை சேர்ந்த கமாண்டர் அபு துஜனா மற்றும் அவனுக்கு உதவியாக இருந்த பயங்கரவாதி கொல்லப்பட்டனர்.
இதுதொடர்பாக ஜம்மு காஷ்மீர் போலீஸ் டுவிட்டரில் வெளியிட்டு உள்ள செய்தியில், புல்வாமாவின் பந்திபோராவில் நடந்த என்கவுண்டரில் பாகிஸ்தானை சேர்ந்த லஷ்கர்-இ-தொய்பா தலைமை கமாண்டர் அபு துஜனா மற்றும் மற்றொரு பயங்கரவாதி கொல்லப்பட்டனர். இது காஷ்மீர் போலீஸ் மற்றும் பாதுகாப்பு படைகளுக்கு முக்கிய சாதனையாகும், என குறிப்பிட்டு உள்ளது.
பாகிஸ்தானை சேர்ந்த அபு துஜனா பாதுகாப்பு படையினர் மீது நடத்தப்பட்ட தாக்குதல்களில் உடந்தையாக இருந்தவன். பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரை சேர்ந்தவன். காஷ்மீர் மாநில இளைஞர்கள் மத்தியில் மிகவும் பிரபலமானவன். சமூக வலைதளங்களில் வீடியோக்கள் மற்றும் புகைப்படங்களை தொடர்ச்சியாக பதிவிட்டு இளைஞர்களை பயங்கரவாத பாதையில் இழுக்க முயற்சிகளை மேற்கொண்டவன். ராணுவ தகவல்களின்படி பள்ளத்தாக்கு பகுதியில் முக்கிய பயங்கரவாதிகள் 12 பேரில் இவனும் ஒருவன் என தெரிவிக்கப்பட்டு உள்ளது. தெற்கு காஷ்மீரில் நடந்த பல்வேறு பயங்கரவாத தாக்குதலுக்கு மூளையாக செயல்பட்டவன் என தெரிவிக்கப்பட்டு உள்ளது.
பர்கான் வானி, சப்ஸார் பாத்தை அடுத்து கொல்லப்பட்ட மூன்றாவது உயர்மட்ட பயங்கரவாதிதான் இந்த அபு துஜனா.
இதற்கிடையே அபு துஜனா அப்பகுதியில் ஒரு பெண்ணை சமீபத்தில் திருமணம் செய்துக் கொண்டதாகவும், அப்பெண்ணை சந்திக்க சென்ற போதுதான் பாதுகாப்பு படைகள் அதிரடி தாக்குதல் நடத்தி கொன்று உள்ளது என தகவல்கள் வெளியாகி உள்ளது.
வன்முறை வெடிப்பு
பயங்கரவாதிகளுக்கு எதிரான துப்பாக்கி சண்டை நடைபெற்ற போது பாதுகாப்பு படையினரை பணியை செய்ய விடாது உள்ளூர் மக்கள் தாக்குதலில் ஈடுபட்டனர். கற்களை வீசினர். பாதுகாப்பு படையினர் அவர்களை விரட்டினர். புல்வாமா மருத்துவமனை பகுதியில் என்கவுண்டர்
நடந்த பகுதியில் இருந்து திரும்பிய பாதுகாப்பு படையினர் மீது உள்ளூர்வாசிகள் கற்களை வீசினர். இதனையடுத்து பாதுகாப்பு படையினர் கண்ணீர் புகைக்குண்டுகளை வீசி கூட்டத்தை கலைக்க முயற்சி செய்தனர். பெல்லட் துப்பாக்கிகள் பிரயோகப்படுத்தினர்.
வன்முறையாளர்களை கட்டுப்படுத்த பாதுகாப்பு படையினர் நடத்திய துப்பாக்கி சூட்டில் ஒருவர் உயிரிழந்தார். பலர் காயம் அடைந்து உள்ளனர். காயம் அடைந்தவர்கள் அங்குள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உள்ளனர். பள்ளத்தாக்கு பகுதியில் மீண்டும் பதட்டமான நிலையானது ஏற்பட்டு உள்ளது.
இன்டர்நெட் சேவை முடக்கம்
பள்ளத்தாக்கு பகுதியில் வன்முறை வெடித்து உள்ளநிலையில் மேலும் அசம்பாவித சம்பவங்கள் நேரிட்டுவிடாத வண்ணம் இன்டர்நெட் சேவை முடக்கப்பட்டது. பயங்கரவாதி கொல்லப்பட்டதும் மோதல் வெடித்ததை அடுத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக காஷ்மீரில் மொபைல் இன்டர்நெட் சேவை முடக்கப்பட்டு உள்ளது என போலீஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டு உள்ளது. விரோதிகள் தேவையற்ற பிரசாரத்தில் ஈடுபடுவதை தவிர்க்க நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளது. வீடியோக்கள், புகைப்படங்களை வெளியிடுவதை தவிர்க்க நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளது.