தேசிய செய்திகள்

மொபைல் கட்டணங்கள் மீண்டும் உயர்வு - டெலிகாம் நிறுவனங்கள் திட்டம்!

கட்டண உயர்வு அமல்படுத்தப்பட்டால், ப்ரீபெய்ட் மற்றும் போஸ்ட்பெய்ட் வாடிக்கையாளர்கள் இருவருக்கும் மாதாந்திர செலவு அதிகரிக்கும் வாய்ப்பு உள்ளது.

புது டெல்லி,

மொபைல் கட்டணங்கள் மீண்டும் உயருமா? இந்த ஆண்டே 15 சதவிதம் வரை கட்டண உயர்வுக்கு டெலிகாம் நிறுவனங்கள் திட்டம்!

தொலைத்தொடர்பு நிறுவனங்கள்

இந்தியாவில் மொபைல் சேவை கட்டணங்கள் (Mobile Tariffs) மீண்டும் உயர வாய்ப்புள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. ரிலையன்ஸ் ஜியோ (Jio), ஏர்டெல் (Airtel), வோடஃபோன் ஐடியா (Vi) உள்ளிட்ட முன்னணி தொலைத்தொடர்பு நிறுவனங்கள், இந்த ஆண்டுக்குள் 10 சதவிதம் முதல் 15 சதவிதம் (சில மதிப்பீடுகளின்படி 16–20%) வரை கட்டணங்களை உயர்த்துவது குறித்து பரிசீலித்து வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

செலவுகள் அதிகரித்துள்ளது

டெலிகாம் நிறுவனங்கள் தற்போது அதிக வருவாய் ஈட்டும் திட்டங்களுக்கு (Higher Value Plans) வாடிக்கையாளர்களை மாற்றுவதில் கவனம் செலுத்தி வருகின்றன. 4 ஜி(4G) மற்றும் 5 ஜி(5G) சேவைகளின் விரிவாக்கம், நெட்வொர்க் முதலீடுகள் மற்றும் செயல்பாட்டு செலவுகள் அதிகரித்துள்ளதால், கட்டண உயர்வு குறித்து நிறுவனங்கள் ஆலோசித்து வருவதாக கூறப்படுகிறது.

சந்தை ஆய்வாளர்கள்

கடந்த கட்டண உயர்வுக்கு பிறகு, நிறுவனங்களின் ARPU (Average Revenue Per User) கணிசமாக உயர்ந்துள்ளது. இருப்பினும், 5 ஜி (5G) கட்டமைப்பு, புதிய தொழில்நுட்ப முதலீடுகள் மற்றும் வருவாய் வளர்ச்சியை தொடர, மீண்டும் கட்டணங்களை உயர்த்த வேண்டிய அவசியம் இருப்பதாக சந்தை ஆய்வாளர்கள் கருதுகின்றனர்.

ஆய்வு

மார்கன் ஸ்டான்லி வெளியிட்டுள்ள ஆய்வில், இந்திய டெலிகாம் நிறுவனங்கள் 4 ஜி(4G) மற்றும் 5 ஜி(5G) திட்டங்களின் கட்டணங்களை 16 சதவிதம் முதல் 20 சதவிதம் வரை உயர்த்தக்கூடும் என்று கணிக்கப்பட்டுள்ளது. இருப்பினும், இதுவரை எந்த நிறுவனமும் புதிய கட்டண உயர்வை அதிகாரப்பூர்வமாக அறிவிக்கவில்லை.

வாய்ப்பு உள்ளது

கட்டண உயர்வு அமல்படுத்தப்பட்டால், ப்ரீபெய்ட் மற்றும் போஸ்ட்பெய்ட் வாடிக்கையாளர்கள் இருவருக்கும் மாதாந்திர செலவு அதிகரிக்கும் வாய்ப்பு உள்ளது. ஜியோ, ஏர்டெல் மற்றும் வோடபோன் நிறுவனங்களின் புதிய திட்டங்கள் குறித்த அறிவிப்புகள் வெளியாகும் வரை தற்போதைய கட்டணங்களே தொடரும்.