தேசிய செய்திகள்

வெளிநாட்டு பயணங்களை தவிர்க்க மத்திய மந்திரிகளுக்கு மோடி அறிவுறுத்தல்

கூட்ட தொடருக்கு தங்கள் துறைகளை தயாராக வைத்திருக்குமாறு மத்திய மந்திரிகளிடம் அவர் கேட்டுக் கொண்டார்.

புதுடெல்லி,

பாராளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் கடந்த ஆகஸ்ட் மாதம் 13-ந் தேதி காலவரையின்றி ஒத்தி வைக்கப்பட்டது. இன்றுடன் 104 நாட்கள் கடந்துவிட்டன. ஆனாலும் அந்த கூட்டத்தொடர் இன்று காலை வரை அதிகார பூர்வமாக முடித்து வைக்கப்படவில்லை.

மத்திய மந்திரிசபை கூட்டம்

இதற்கிடையே பிரதமர் மோடி தலைமையில் நேற்று மத்திய மந்திரிசபை கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் டிசம்பர் 15-க்கு முன்பே பாராளுமன்ற கூட்டத்தொடரை கூட்ட வேண்டும் என்று பரிந்துரைத்தார். அதற்கு முன்பாக வெளிநாட்டு பயணங்களை தவிர்க்குமாறு மோடி மத்திய மந்திரிகளை அறிவுறுத்தியதாக தகவல் வெளியாகியுள்ளது.

கூட்டத் தொடருக்கு தங்கள் துறைகளை தயாராக வைத்திருக்குமாறு மத்திய மந்திரிகளிடம் அவர் கேட்டுக் கொண்டார். கூட்டத்தொடர் எப்போது தொடங்கும். எத்தனை நாட்கள் நடைபெறும் என்பதை பாராளுமன்ற விவகாரங்களுக்கான மந்திரி சபை குழு இறுதி செய்யும்.

பாராளுமன்ற கூட்டத் தொடர் பாராளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் கூட்டுவதில் ஏற்படும் தாமதம் குறித்து எதிர்க்கட்சிகள் தொடர்ந்து கேள்வி எழுப்பி வரும் நிலையில் மத்திய மந்திரி சபை கூட்டத்தில் பிரதமரின் அறிவுறுத்தல்கள் முக்கியத்துவம் பெற்றுள்ளது.

அடுத்த பாராளுமன்ற கூட்டத்தொடர் வருகிற 15-ந் தேதிக்கு முன்பே நடைபெற வாய்ப்புள்ள நிலையில் தொகுதி மறு சீரமைப்புடன் தொடர்புடைய மகளிர் இட ஒதுக்கீடு மசோதாவை மத்திய அரசு கொண்டு வருமா? என்ற எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.

SCROLL FOR NEXT