தேசிய செய்திகள்

2029-ம் ஆண்டில் மோடி பிரதமர் ஆவது கடினம்; அப்போது விஜய்... ஜோதிடர் ராதன் பண்டிட் பரபரப்பு பேட்டி

பிரதமர் மோடியின் ஜெராக்ஸ் காப்பி போல இருக்கிறது முதல்-அமைச்சர் விஜய்யின் ஜாதகம் என்று கூறினார்.

சென்னை

த.வெ.க.வின் செய்தி தொடர்பாளரான ரிக்கி ராதன் பண்டிட் வெற்றிவேல், பிரபல ஜோதிடராகவும் இருக்கிறார். தமிழக முதல்-அமைச்சர் விஜய்யின் சிறப்பு பணி அதிகாரியாக (அரசியல்) அவர் நியமிக்கப்பட்டதற்கு பல்வேறு அரசியல் கட்சி தலைவர்களும் கடும் கண்டனம் தெரிவித்தனர். சட்டசபையிலும் இந்த விவகாரம் எதிரொலித்தது. இதனை அடுத்து, அந்த நியமன உத்தரவு வாபஸ் பெறப்பட்டது.

இந்த சூழலில், அவர் தனியார் ஊடகம் ஒன்றிற்கு அளித்த பேட்டியின்போது, முதல்-அமைச்சர் விஜய்க்கு ஜோதிடத்தின் மீது பெரிய அளவில் நம்பிக்கை இல்லை என கூறினார்.

முன்னாள் முதல்-அமைச்சர் ஜெயலலிதா இறந்த பிறகு நான் முதல்-அமைச்சர் விஜய்யையும், அஜித் சாரையும் தொடர்பு கொண்டேன். அஜித் சாருக்கும் முதல்-அமைச்சராகும் யோகம் இருக்கு. ஆனால், அவர் அதில் விருப்பம் இல்லை என்று கூறி விட்டார்.

முதல்-அமைச்சர் விஜய்யின் ஜாதகத்தின்படி அஜித் சார் போட்டிக்கு வரமாட்டார். விஜய் சார் போட்டியே இல்லாத பிரதமர் ஆகும் யோகம் கூட இருக்கு. 100 வருடம் கடந்து அவர் வாழ்வார் என்று கூறியுள்ளார்.

பிரதமர் மோடிக்கு இருக்கும் யோகத்தில் கால்வாசிதான் ராகுல் காந்திக்கு இருக்கிறது. வரும் 2029-ம் ஆண்டில் மோடிக்கு ராகுதசை ராகுபுத்தி. அவர் பிரதமர் ஆவது கடினம். மூன்றாம் அணி ஒன்று நிச்சயம் உருவாகும். விஜய் அப்போது தன் யோகத்தின் உச்சத்தில் இருப்பார் என்று கூறினார்.

முதல்-அமைச்சர் விஜய்க்கு பிரதமர் ஆகும் அளவுக்கு யோகம் இருக்கிறது. பிரதமர் மோடியின் ஜெராக்ஸ் காப்பி போல இருக்கிறது முதல்-அமைச்சர் விஜய்யின் ஜாதகம். இன்னும் 30 முதல் 40 ஆண்டுகளுக்கு அவர் போட்டியே இல்லாமல் வாழ்வார் என்று கூறினார்.

சிறப்பு அதிகாரி நியமன உத்தரவு வாபஸ் பெறப்பட்ட விவகாரத்தில் முதல்-அமைச்சர் விஜய் பணிந்து விட்டாரா? என்ற கேள்விக்கு பதிலளித்த அவர், முதல்-அமைச்சர் விஜய்யை யாராலும் பணிய வைக்க முடியாது. அவரை போன்ற ஒரு தைரியசாலியை பார்க்க முடியாது. ஆனால், இந்த விவகாரம் பெரிய அளவில் செல்ல வேண்டாம் என்பதற்காகவும், தேவையற்ற சர்ச்சை நீடிக்க வேண்டாம் என்பதற்காகவும் இந்த முடிவை அவர் எடுத்திருக்க கூடும் என்றார்.

சட்டசபை தேர்தலுக்கு முன்பு, நீங்க சுனாமி எல்லோரையும் தூக்கி வீசி ஜெயிச்சிடுவீங்கனு நான் சொன்னேன். ஜனவரி 1-ந்தேதி நீங்கள் தூங்கி விட்டு, மே 15-ந்தேதி எழுந்து பார்த்தால் கூட விஜய் முதல்-அமைச்சர் ஆகி இருப்பார் என்று கூறினேன். அவர் அதனை பெரிய அளவில் எடுத்து கொள்ளவில்லை. சிரித்து விட்டு சென்று விட்டார் என கூறினார்.

SCROLL FOR NEXT