தேசிய செய்திகள்

மராட்டியத்தில் 24-ந்தேதி முதல் பருவமழை தொடங்க வாய்ப்பு

இந்த ஆண்டு பருவமழை பொழிவதில் கடும் காலதாமதம் ஏற்பட்டுள்ளதாக வானிலை ஆய்வு மையம் விளக்கியுள்ளது.

மும்பை,

மராட்டிய மாநிலத்தில் ஜூன் மாதம் 11-ந்தேதி முதல் தென்மேற்கு பருவமழை தொடங்கும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்து இருந்தது. ஆனால், இந்த ஆண்டு பருவமழை இன்னும் தொடங்காததால் கடும் வறட்சி நிலவி வருகிறது.

காற்றழுத்த தாழ்வு மண்டலம்

அரபிக்கடல் மற்றும் வங்காள விரிகுடா கடலோரப்பகுதிகளில் போதிய காற்றழுத்த தாழ்வு மண்டலம் மற்றும் குறைந்த காற்றழுத்த பகு திகள் உருவாகவில்லை. மேலும், வடக்கு திசையில் நகர்ந்த சூறாவளி சுழற்சிகள் காரணமாகவும் இந்த ஆண்டு பருவமழை பொழிவதில் கடும் காலதாமதம் ஏற்பட்டுள்ளதாக வானிலை ஆய்வு மையம் விளக்கியுள்ளது.

பருவமழை

இருப்பினும், வருகிற 24-ந்தேதி முதல் கொங்கன் பகுதியில் இடியுடன் கூடிய பருவமழை பெய்யத்தொடங்கும். மும்பையை பொறுத்தவரையில் அன்றைய தினத்தில் இடியுடன் கூடிய மிதமான மழை பெய்ய வாய்ப்பு உள்ளது. மும்பை தவிர தானே,பால்கர், ராய்காட் ஆகிய பக்கத்து மாவட்டங்களுக்கு லேசான மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

பருவமழை பெய்ய ஏற்பட்ட காலதாமதம் காரணமாக, மும்பை நகருக்கு குடிநீர் வழங்கும் முக்கிய ஏரிகளின் மொத்த நீர்மட்டம் வெறும் 9 சதவீத மாக கடுமையான சரிவை சந்தித்துள்ளது. தற்போதைய நிலவரப்படி ஏரிகளில் 1.30 லட்சம் லிட்டர் தண்ணீர் மட்டுமே இருப்பு உள்ளது. கடந்த ஆண்டு இதே காலகட்டத்தில் ஏரிகளின் மொத்த நீர்மட்டம் 25 சதவீதமாக இருந்தது குறிப்பிடத்தக்கது. மழை தள்ளிப்போவதால் மும்பை மக்கள் குடிநீர் தட்டுப்பாடு ஏற்படுமோ என்ற அச்சத்தில் உள்ளனர்.