புதுடெல்லி,
ஒரே நாளில் 53 லட்சத்திற்கும் அதிகமான கேஸ் சிலிண்டர்கள் டெலிவரி செய்யப்பட்டுள்ளது, இனி கேஸ் சிலிண்டர் தட்டுப்பாடு ஏற்படாது என மத்திய அரசு தெரிவித்துள்ளது. இது தொடர்பாக மத்திய பெட்ரோலிய அமைச்சகம் வெளியிட்டுள்ள தகவலின் படி,
மத்திய கிழக்கு நாடுகளில் நிலவி வரும் போர்ச் சூழல் மற்றும் பதற்றங்களுக்கு மத்தியிலும், இந்தியாவில் எரிபொருள் விநியோகம் எவ்விதத் தடையுமின்றி சீராக நடைபெறுவதை உறுதி செய்ய மத்திய அரசு பல்வேறு அதிரடி நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.
இது தொடர்பாக பெட்ரோலியம் மற்றும் இயற்கை எரிவாயு அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், பொதுமக்கள் யாரும் அச்சமடைந்து பெட்ரோல், டீசல் அல்லது சமையல் எரிவாயுவை (LPG) அளவுக்கு அதிகமாக வாங்கிச் சேமிக்க வேண்டாம் என்று கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.
சனிக்கிழமையான நேற்று ஒரே நாளில் மட்டும் நாடு முழுவதும் சுமார் 53.5 லட்சம் சமையல் எரிவாயு சிலிண்டர்கள் விநியோகிக்கப்பட்டுள்ளன. மேலும், வீடுகளுக்கான குழாய் வழி எரிவாயு (PNG) மற்றும் வாகனங்களுக்கான சிஎன்ஜி (CNG) விநியோகம் 100 சதவீதம் தடையின்றி வழங்கப்பட்டு வருவதாக அரசு உறுதி அளித்துள்ளது.
சர்வதேச அளவில் கச்சா எண்ணெய் விலை கடுமையாக உயர்ந்துள்ள போதிலும், இந்திய நுகர்வோரைப் பாதுகாக்கும் வகையில் பெட்ரோல் மற்றும் டீசல் மீதான கலால் வரியை லிட்டருக்கு 10 ரூபாய் மத்திய அரசு குறைத்துள்ளது.
எண்ணெய் சுத்திகரிப்பு நிலையங்கள் முழுத் திறனுடன் இயங்கி வருவதால், நாட்டில் எரிபொருள் தட்டுப்பாடு ஏற்படாது என்று மத்திய அரசு மீண்டும் தெளிவுபடுத்தியுள்ளது.