மூணாறு,
குடும்பத்தகராறில் மனைவி மற்றும் மாமியாரை வெட்டிக்கொலை செய்த தொழிலாளி கைது செய்யப்பட்டார்.
கேரளம் மாநிலம் இடுக்கி மாவட்டம் பீர்மேடு அருகே உள்ள கிளன்மேரி எஸ்டேட் பகுதியை சேர்ந்தவர் பிரின்ஸ் (வயது 36). இவர் எஸ்டேட் தொழிலாளியாக பணிபுரிந்து வந்தார். இவரது மனைவி பிரியங்கா (வயது 30). இவர் வெளிநாட்டில் வேலை பார்த்து வந்தார். கடந்த ஒரு மாதத்திற்கு முன்பு சொந்த ஊருக்கு பிரியங்கா திரும்பினார். வீடு திரும்பிய அவர் தனது தந்தை இஸ்ரவேல் மற்றும் தாயார் நேசம் (வயது 62) ஆகி யோருடன் வசித்து வந்தார்.
இந்த நிலையில் நேற்று முன் தினம் காலை பிரியங்காவின் வீட்டில் இருந்து அலறல் சத்தம் கேட்டது. உடனே அக்கம் பக்கத்தினர் அங்கு ஓடிச் சென்று பார்த்தபோது பிரியங்கா, நேசம் ஆகியோர் ரத்த வெள்ளத்தில் உயிரிழந்து கிடந்துள்ளனர். இஸ்ரவேல் படுகாயங்களுடன் உயிருக்கு போராடிக் கொண்டிருந்தார்.இது குறித்து அவர்கள் பீர்மேடு போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். தகவல் அறிந்த போலீசார் உடனே சம்பவ இடத்துக்கு விரைந்து வந்த இஸ்ரவேலை மீட்டு கோட்டயம் அரசு மருத்துவக் கல்லூரி ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
மேலும், கொலை செய்யப்பட்டிருந்த பிரியங்கா மற்றும் நேசம் 2 பேரின் உடல்களையும் பிரேத பரிசோதனைக்காக பீர்மேடு அரசு தாலுகா ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். பின்னர், போலீசார் நடத்திய விசாரணையில், மனைவி மற்றும் மாமியாரை வெட்டிக்கொலை செய்தது பிரின்ஸ் என்பது தெரியவந்தது. இதையடுத்து பிரின்ஸை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தினர்.
விசாரணையில், குடும்ப பிரச்சினை காரணமாக பிரின்ஸ் அடிக்கடி மனைவியுடன் சண்டையிட்டு வந்துள்ளார். இந்த நிலையில் நேற்று முன் தினம் மது போதையில் வீட்டிற்கு வந்துள்ளார். அப்போது மீண்டும் மனைவியுடன் தகராறு ஏற்பட்டது. இதில், ஆத்திரமடைந்த பிரின்ஸ் தனது மனைவி மற்றும் மாமியாரை அரிவாளால் சரமாரியாக வெட்டியதாக போலீசாருக்கு தெரியவந்தது. இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.