தேசிய செய்திகள்

தாயை ஆபாசமாக திட்டியதால் பயங்கரம்: வாலிபர் கோடரியால் வெட்டிக் கொலை

தாயை ஆபாசமாக திட்டியதால் வாலிபரை கோடரியால் வெட்டிக் கொலை செய்த நண்பர், துண்டித்த தலையுடன் போலீசில் சரண் அடைந்தார்.

பெங்களூரு,

வாலிபரை கோடரியால் வெட்டிக் கொலை செய்த சம்பவம் பற்றிய விவரம் வருமாறு:-

கர்நாடக மாநிலம் மண்டியா மாவட்டம் மலவள்ளி தாலுகா சிக்கபாகிலு கிராமத்தை சேர்ந்தவர் கிரீஷ் (வயது 35). அதேப்பகுதியை சேர்ந்தவர் பசுபதி(28). இவர்கள் 2 பேரும் நண்பர்கள் ஆவார்கள். இந்த நிலையில் கடந்த சில தினங்களுக்கு முன்பு கிரீசுக்கும், பசுபதியின் தாய்க்கும் இடையே திடீரென தகராறு உண்டானது. அப்போது கிரீஷ், பசுபதியின் தாயை அவதூறாக பேசியதோடு, ஆபாசமாக திட்டியதாகவும் தெரிகிறது. இதனை பசுபதி தட்டிக் கேட்டு உள்ளார். இதனால் கிரீசுக்கும், பசுபதிக்கும் இடையே சண்டை ஏற்பட்டது.

இந்த நிலையில் நேற்று காலை சிக்கபாகிலு பகுதியில் உள்ள விவசாய தோட்டத்தில் கிரீஷ் நின்று கொண்டு இருந்தார். அப்போது அங்கு சென்ற பசுபதி, கிரீசிடம் தனது தாயை ஆபாசமாக திட்டியது பற்றி கேட்டு உள்ளார். இதுதொடர்பாக அவர்களுக்குள் மீண்டும் தகராறு ஏற்பட்டது. இந்த தகராறு முற்றி கைகலப்பாக மாறியதாக தெரிகிறது. அப்போது ஆத்திரம் அடைந்த பசுபதி அருகில் கிடந்த கோடரியால் கிரீசை வெட்டி உள்ளார். இதில் ரத்தவெள்ளத்தில் கிரீஷ் சம்பவ இடத்திலேயே சரிந்து விழுந்து பரிதாபமாக இறந்து உள்ளார்.

ஆனாலும் ஆத்திரம் தீராத பசுபதி, கிரீசின் தலையை கோடரியால் வெட்டி துண்டித்தார். பின்னர் துண்டித்த தலையை கையில் எடுத்து கொண்டு ரத்தம் சொட்ட சொட்ட அங்கிருந்து மலவள்ளி புறநகர் போலீஸ் நிலையத்திற்கு பசுபதி சென்று உள்ளார். இதை பார்த்து போலீசார் அதிர்ச்சி அடைந்தனர். இதனை தொடர்ந்து நடந்த சம்பவங்கள் பற்றி கூறி பசுபதி போலீசில் சரண் அடைந்தார். அவரை போலீசார் கைது செய்தனர்.

இதன்பின்னர் கொலை நடந்த இடத்திற்கு பசுபதியை போலீசார் அழைத்து சென்றனர். அங்கு கிரீசின் உடல் கிடந்தது. அவரின் உடலை கைப்பற்றி போலீசார் பிரேத பரிசோதனைக்காக ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இதுதொடர்பாக மலவள்ளி புறநகர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

முன்னதாக பசுபதியிடம் போலீசார் விசாரித்த போது எனது தாயை ஆபாசமாக திட்டிய கிரீசை ஒன்றும் செய்யாமல் விட்டுவிட்டால், நான் வாழ்வதற்கே தகுதியில்லை. அதனால் தான் அவரை கோடரியால் வெட்டி கொலை செய்தேன் என்று தெரிவித்தார். அவரிடம் போலீசார் தொடர்ந்து விசாரித்து வருகின்றனர்.

இந்த பயங்கர கொலை சம்பவம் மண்டியா மாவட்டத்தில் பெரும் பரபரப்பையும், அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.