தேசிய செய்திகள்

எம்.பி. தொகுதிகளை 850 ஆக அதிகரிக்க 3 மசோதாக்கள் முன்மொழிவு: சிறப்பு அமர்வில் நாளை தாக்கல்

நாடாளுமன்ற கட்டிடத்தில் சுமார் 880 உறுப்பினர்கள் ஒரே நேரத்தில் அமர்வதற்கு வசதியாக இருக்கைகள் அமைக்கப்பட்டன.

புதுடெல்லி,

இந்திய நாடாளுமன்றத்தின் மக்களவையில் தற்போதைய அர சியலமைப்பின்படி மாநிலங்களில் இருந்து 530 உறுப்பினர்களுக்கு மிகாமலும், யூனியன் பிரதேசங்களில் இருந்து 20 உறுப்பினர்களுக்கு மிகாமலும் இருக்கிறார்கள். அதாவது மொத்தம் 550-ல் 543 உறுப்பினர்கள் உள்ளனர்.

இந்த உறுப்பினர்கள் எண்ணிக்கையை 800-க்கும் மேல் உயர்த்த மத்திய பா.ஜனதா அரசு ஏற்கனவே திட்டமிட்டு இருந்தது. இதை மனதில்கொண்டுதான் புதிய நாடாளுமன்ற கட்டிடத்தில் சுமார் 880 உறுப்பினர்கள் ஒரே நேரத்தில் அமர்வதற்கு வசதியாக இருக்கைகள் அமைக்கப்பட்டன.

இந்தநிலையில் சட்டசபைகள் மற்றும் நாடாளுமன்றங்களில் பெண்களுக்கான பிரதிநிதித்துவத்தை 33 சதவீதம் ஆக்கும் வகையில் மகளிர் இடஒதுக்கீடு சட்டம் கடந்த 2023-ம் ஆண்டு நிறைவேற்றப்பட்டது. இதனைத் தொடர்ந்து, பெண்களுக்கு 33 சதவீத இடங்கள் அளிப்பதற்கு வசதியாக மக்களவை தொகுதிகளின் எண்ணிக்கையும் அதிகரிக்க மத்திய அரசு முடிவு செய்தது.

இதற்காக அரசியலமைப்பு சட்டத்தில் திருத்தங்கள் செய்யப்படுகின்றன. இந்த நோக்கில் மத்திய அரசு, அரசியலமைப்பு சட்டம் 131-வது திருத்த மசோதா-2026, தொகுதிகள் மறுவரையறை மசோதா-2026 மற்றும் யூனியன் பிரதேசங்களின் சட்டங்கள் திருத்த மசோதா-2026 ஆகிய 3 மசோதாக்களை முன் மொழிந்து உள்ளது.

இந்த மசோதாக்கள் நாளை (வியாழக்கிழமை) கூட உள்ள நாடாளுமன்ற சிறப்பு கூட்டத்தொடரில் தாக்கல் செய்யப்பட உள்ளன. இதையொட்டி நேற்று இந்த மசோதாக்கள், நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டன. இந்த மசோதாக்களில், மக்களவையின் அனுமதிக்கப்பட்ட உறுப்பினர்களின் எண்ணிக்கை 550-ல் இருந்து 850 ஆக உயர்த்தப்பட்டு இருக்கிறது.

அதாவது மாநிலங்களில் 815 மக்களவை தொகுதிகளுக்கு மிகாமலும், யூனியன் பிரதேசங்களில் 35 தொகுதிகளுக்கு மிகாமலும் உருவாக்கப்பட உள்ளது. இந்த உயர்வு, மாநிலங்களின் புதுப்பிக்கப்பட்ட மக்கள் தொகைக்கு இடம் அளிப்பதையும், புதிய இடப்பங்கீட்டைச் செயல்படுத்துவதையும் நோக்கமாக கொண்டு இருக்கிறது.

மேலும், அரசியலமைப்பின் பல்வேறு விதிகளில் 'மக்கள் தொகை' வரையறுக்கப்படும் விதத்தையும் மாற்றுகிறது. எந்த மக்கள்தொகைக் கணக்கெடுப்பின் புள்ளிவிவரங்களைப் பயன்படுத்துவது என்பதை நாடாளுமன்றமே தீர்மானிக்க வழிவகை செய்கிறது. இது தவிர, தொகுதி வரையறைக்கான கட்டமைப்பையும் மாற்றி அமைக்கிறது.

ஒவ்வொரு மக்கள்தொகை கணக்கெடுப்புக்கு பிறகும் தானாகவே தொகுதி மறுவரையறை செய்ய வேண்டியதற்கு பதிலாக, சட்டத்தின் மூலம் தொகுதி வரைய றைக்கு வழிவகை செய்து, அதனை "தொகுதி வரையறை ஆணையம்" செயல்படுத்தும் ஒரு புதிய முறைக்கு வழிவகை செய்கிறது.

இந்த மாற்றங்கள், மாநிலங்களுக்கு இடையிலான இடப்பங் கீட்டில் தாக்கங்களை ஏற்படுத்தக்கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது. கடந்த பல பத்தாண்டுகளாக மேற்கொள்ளப்பட்ட குடும்பக்கட்டுப்பாடு மற்றும் விழிப்புணர்வு நடவடிக்கைகளின் காரணமாக, தென் மாநிலங்களில் மக்கள்தொகை வளர்ச்சி வீதம் குறைந்து உள்ளது.

ஆனால் சில வட மாநிலங்களில் மக்கள்தொகை வளர்ச்சி வீதம் குறையவில்லை. இதனால் அதிக மக்கள்தொகை கொண்ட வடமாநிலங்களுக்கு அதிக தொகுதிகள் கிடைக்கும் என்றும், தென் மாநிலங்களில் தொகுதிகள் குறையும் எனவும் பேசப்படுகிறது. இதன் காரணமாக மத்திய அரசின் இந்த நடவடிக்கையை தமிழக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் உள்ளிட்டோர் கடுமையாக எதிர்த்து உள்ளனர்.