ஐதராபாத்,
தெலுங்கானா மாநில துணை முதல்-மந்திரி பவன் கல்யான். இவர் ஜனசேனா என்ற கட்சியை நடத்தி வருகிறார். இந்த கட்சியை சேர்ந்த எம்.பி. லிங்கமனேனி ரமேஷ். இவரின் மகன் லிங்கமனேனி சஞ்சுஸ் (வயது 21).
இந்நிலையில், சஞ்சுஸ் கடந்த 16ம் தேதி மாலை 3 மணியளவில் ரங்காரெட்டி மாவட்டம் மாதப்பூர் நகரில் உள்ள சாலையில் சொகுசு காரில் வேகமாக சென்றார். அப்போது, மாதப்பூரில் உள்ள கோகினூர் வணிக வளாகம் அருகே உள்ள சாலையை இளம்பெண் கடக்க முயன்றார்.
அப்போது, வேகமாக காரை ஓட்டி வந்த சஞ்சுஸ் சாலையை கடக்க முயன்ற இளம்பெண் மீது காரை மோதினார். இந்த கோர விபத்தில் படுகாயமடைந்த இளம்பெண்ணை மீட்ட அருகில் இருந்தவர்கள் அவரை அருகில் உள்ள மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு இளம்பெண்ணை பரிசோதித்த டாக்டர்கள் அவர் ஏற்கனவே உயிரிழந்துவிட்டதாக அறித்தனர்.
இந்த சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார், விசாரணை நடத்தி வருகின்றனர். விசாரணையில் உயிரிழந்த இளம்பெண் விபத்து ஏற்பட்ட சாலைக்கு எதிரே உள்ள வணிக வளாகத்தில் வேலை செய்து வந்த பாரதி (வயது 26) என்பது தெரியவந்தது.
அவர் சம்பவம் நடந்த போது சாலையின் மறுபுறத்தில் இருந்து தான் பணியாற்றும் கடைக்கு செல்ல சாலையை கடந்துள்ளார். அப்போது, அவர் மீது எம்.பி. மகன் சஞ்சுஸ் சொகுசு கார் மோதியுள்ளது. இந்த சம்பவம் தொடர்பாக சஞ்சுஸ் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. ஆனால், அவர் இதுவரை கைது செய்யப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.