தேசிய செய்திகள்

முல்லைப் பெரியாறு வாகன நிறுத்தம் தொடர்பான வழக்கு: சுப்ரீம் கோர்ட்டில் விசாரணை 3 வாரத்துக்கு ஒத்திவைப்பு

முல்லைப் பெரியாறு வாகன நிறுத்தம் தொடர்பான வழக்கு விசாரணையை, சுப்ரீம் கோர்ட் 3 வாரத்துக்கு ஒத்திவைத்தது.

புதுடெல்லி,

முல்லைப் பெரியாறு அணையின் நீர்ப்பிடிப்பு பகுதியான தேக்கடி ஆனைவாசல் பகுதியில் கேரள அரசு நிரந்தர வாகன நிறுத்தம் அமைக்க தென் மண்டல பசுமை தீர்ப்பாயம் வழங்கிய அனுமதிக்கு சுப்ரீம் கோர்ட்டு இடைக்கால தடை விதித்தது. இந்த தடையை மீறி அங்கு கட்டுமான பணிகள் மேற்கொண்டதால், கேரள அரசு மீது தமிழக அரசு கோர்ட்டு அவமதிப்பு வழக்கு தொடர்ந்தது. இதற்கு கேரள அரசு தரப்பில் பதில் மனு தாக்கல் செய்ய ஏற்கனவே இரு வார கால அவகாசம் கோரி சுப்ரீம் கோர்ட்டில் கடந்த வாரம் கடிதம் அளிக்கப்பட்டு உள்ளது.

இந்த நிலையில் இந்த வழக்கு சுப்ரீம் கோர்ட்டில் நீதிபதிகள் எஸ்.ஏ.போப்டே, பி.ஆர்.கவாய் ஆகியோர் அடங்கிய அமர்வில் நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது, கேரள அரசு பதில் மனு தாக்கல் செய்ததும் தங்கள் தரப்பில் எதிர்பதில் மனு தாக்கல் செய்ய ஒரு வார கால அவகாசம் வழங்க வேண்டும் என்று தமிழக அரசின் சார்பில் கோரிக்கை விடுக்கப்பட்டது. அதை ஏற்றுக்கொண்ட நீதிபதிகள் வழக்கு விசாரணையை 3 வாரங்களுக்கு ஒத்திவைத்து உத்தரவிட்டனர்.