தேசிய செய்திகள்

வயதான தம்பதியை கொன்று ரூ.10 லட்சம் கொள்ளை; இளம்பெண், காதலனுக்கு ஆயுள் தண்டனை - மும்பை கோர்ட்டு தீர்ப்பு

வீட்டில் வேலை செய்து வந்த பெண்ணும், அவரது காதலனும் சேர்ந்து வயதான தம்பதியை கொலை செய்துள்ளனர்.

மும்பை,

மும்பை பாந்திரா பகுதி, ஏக்தா எலைட் கூட்டுறவு வீட்டு வசதி சங்க குடியிருப்பில் வசித்து வந்தவர் நானக் மக்ஜானி(வயது85). இவரது மனைவி தயா(81). இவர்களது மகன்கள் மற்றும் உறவினர்கள் வெளிநாட்டில் வசித்து வருகின்றனர். இந்த தம்பதியை பராமரிப்பதற்காக, கடந்த 2018-ம் ஆண்டு ஜூன் மாதம், ஒடிசா மாநிலத்தை சேர்ந்த பார்வதி காகா(26) என்ற இளம்பெண் வேலைக்கு சேர்ந்துள்ளார்.

இந்நிலையில் கடந்த ஜூன் 21-ஆம் தேதி, முதிய தம்பதியினர் நீண்ட நேரமாகியும் வீட்டை விட்டு வெளியே வராததால் சந்தேகமடைந்த காவலாளி உள்ளே சென்று பார்த்துள்ளார். அப்போது, தம்பதியினர் இருவரும் கழுத்து அறுக்கப்பட்டுக் கொடூரமான முறையில் கொலை செய்யப்பட்டு கிடப்பதைக் கண்டு அதிர்ச்சியடைந்தார்.

தகவலறிந்து வந்த போலீசார் நடத்திய முதற்கட்ட விசாரணையில், வீட்டில் இருந்த ரூ.10 லட்சம் மதிப்பிலான நகை மற்றும் பணம் கொள்ளையடிக்கப்பட்டதும், பராமரிப்பாளராக இருந்த பார்வதி காகா தலைமறைவாகியிருப்பதும் தெரியவந்தது.

தொடர்ந்து நடத்தப்பட்ட விசாரணையில், பார்வதி தனது காதலன் சிங்காசன் என்பவருடன் சேர்ந்து இந்த கொலையை செய்ததும், இருவரும் நாக்பூர் வழியாக ரெயில் மூலம் ஒடிசாவிற்கு தப்பியோட முயன்றதும் கண்டுபிடிக்கப்பட்டது. உடனடியாக நாக்பூர் ரெயில்வே போலீசாருக்கு தகவல் கொடுக்கப்பட்டு, அவர்கள் 2 பேரையும் போலீசார் கைது செய்தனர்.

இந்த வழக்கு மும்பை செசன்சு கோர்ட்டு நீதிபதி வி.பி.போக்ரா முன்னிலையில் நடைபெற்று வந்தது. இறுதி விசாரணைக்கு பிறகு இருவர் மீதான குற்றமும் நிரூபிக்கப்பட்டது. அரசு தரப்பில் இவர்களுக்கு மரண தண்டனை விதிக்கக் கோரப்பட்டது.

எனினும், இது அரிதிலும் அரிதான வழக்கு அல்ல எனக் கூறி மரண தண்டனையை நிராகரித்த நீதிபதி, குற்றவாளிகள் இருவருக்கும் தலா 3 ஆயுள் தண்டனைகளை விதித்தார். மேலும், முதன்மை குற்றவாளியான பார்வதி காகாவிற்கு கூடுதலாக 7 ஆண்டுகள் கடுங்காவல் தண்டனை விதித்தும் தீர்ப்பளித்தார்.

SCROLL FOR NEXT