புனே
மராட்டியத்தின் மும்பை நகரில் உள்ள மருத்துவமனை ஒன்றிற்கு நேற்றிரவு 11 மணியளவில் இ-மெயிலில் வெடிகுண்டு மிரட்டல் ஒன்று வந்துள்ளது. இதனை படித்து பார்த்து அறிந்ததும் ஊழியர்கள் பதற்றமடைந்தனர். தகவல் அறிந்து, நோயாளிகளும் அதிர்ச்சியடைந்தனர்.
அதில், மருத்துவமனை வளாகத்தில் இன்று மாலை 4 மணியளவில் எல்.இ.டி. வெடிகுண்டு ஒன்று வெடிக்கும் என அச்சுறுத்தல் விடப்பட்டு இருந்தது. இந்த தகவல் கிடைத்ததும், மும்பை போலீசின் வெடிகுண்டு கண்டறிதல் மற்றும் செயலிழப்பு பிரிவினர் உடனடியாக அந்த பகுதிக்கு சென்றனர். நீண்டநேரம் தேடுதல் வேட்டை நடத்தியும் சந்தேகத்திற்குரிய பொருள் எதுவும் கண்டறியப்படவில்லை.
இதனை தொடர்ந்து, இந்த இ-மெயிலை அனுப்பிய நபர் யாரென்று கண்டறியும் முயற்சியில் போலீசார் ஈடுபட்டு வருகின்றனர். இந்த வார தொடக்கத்தில், ஐதராபாத்தில் உள்ள இந்திய வானிலை ஆய்வு மையத்திற்கு இ-மெயிலில் வெடிகுண்டு மிரட்டல் ஒன்று வந்தது. அதில், ஆர்.டி.எக்ஸ். வகையை சேர்ந்த 14 சக்தி வாய்ந்த வெடிகுண்டுகள் கட்டிடத்தில் வைக்கப்பட்டு உள்ளன என தெரிவிக்கப்பட்டு உள்ளது.
உடனடியாக ஊழியர்கள் பாதுகாப்பாக வெளியேற்றப்பட்டு, ஒவ்வோர் அறையாக போலீசார் சோதனை நடத்தினர். அதுபற்றி பேகம்பேட் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.