மும்பை,
தடைசெய்யப்பட்ட பயங்கரவாத அமைப்பான ஜெய்ஷ்-இ-முகமது உடன் தொடர்புடையதாகச் சந்தேகிக்கப்படும் நபர் மும்பையில் போலீசாரால் கைது செய்யப்பட்டார்.
ஜெய்ஷ்-இ-முகமது இயக்கத்தைச் சேர்ந்த பயங்கரவாத அமைப்புடன் தொடர்புடைய,நபர் மும்பையின் மாஹிம் மெட்ரோ ரெயில் நிலையத்தில் வைத்து கைது செய்யப்பட்டார். இவர் ரேபிடோ ஓட்டுநராக பணியாற்றிக் கொண்டிருந்தது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
இணையதளம் மூலம் பிரிவினைவாத கருத்துக்களை பரப்பி வந்தது மற்றும் மதவாத வன்முறையைத் தூண்டும் வகையில் செயல்பட்டது போன்ற குற்றச்சாட்டுகளின் கீழ் மராட்டிய பயங்கரவாதத் தடுப்புப் படை அதிகாரிகள், 33 வயதான நபரை கைது செய்திருக்கிறார்கள்.
மொஹம்மது ஹசன் அபு என்று அடையாளம் காணப்பட்டுள்ள நபரின் நடமாட்டம் குறித்து ரகசிய தகவல் கிடைத்ததைத் தொடர்ந்து கைது செய்யப்பட்டுள்ளார். முதற்கட்ட விசாரணையில், இவருக்கும் பாகிஸ்தானிலிருந்து செயல்படும் பயங்கரவாத அமைப்புக்கும் இடையே தொடர்பு இருந்ததும் கண்டறியப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.
டெலிகிராம் குழு ஒன்றை உருவாக்கி, அதன் மூலம் ஜெய்ஷ்-இ-முகமது அமைப்பின் தலைவர் மசூத் அசாரின் பேச்சுகளை பகிர்ந்து வந்துள்ளார் என்றும் கூறப்படுகிறது.
இது குறித்து அக்தரின் பக்கத்து வீட்டுக்காரர் கூறுகையில், கடந்த 3 முதல் 3.5 வருடங்களாக அக்பர் வாடகை வீட்டில் வசித்து வந்தார். அவர் இப்படிச் செய்வார் என்று நான் நினைக்கவே இல்லை. வெளியில் உட்கார்ந்து பேசுவதைப் பார்த்தேன். இங்கு வாசனை திரவியம் விற்றுவிட்டு இரவில் வேறு இடத்தில் வேலை செய்வார். அவரை ஒரு கெட்ட மனிதனாக நினைக்கவே முடியவில்லை என்றார்.
மும்பையில், பயங்கரவாதி என சந்தேகிக்கப்படும் நபர் கைது செய்யப்பட்டிருப்பது பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.