தேசிய செய்திகள்

மூணாறு: காரை தாக்கி சேதப்படுத்திய ‘படையப்பா’ காட்டு யானை - சுற்றுலா பயணிகள் அச்சம்

ஊராட்சி உறுப்பினர் கருப்பசாமிக்கு சொந்தமான காரை ‘படையப்பா’ யானை திடீரென தாக்கி உள்ளது.

திருவனந்தபுரம்,

கேரள மாநிலம் இடுக்கி மாவட்டத்தில் அமைந்துள்ள மூணாறு சுற்றுலா தளத்திற்கு தினந்தோறும் ஏராளமான சுற்றுலா பயணிகள் வருகை தருகின்றனர். மூணாறில் உள்ள மலை மற்றும் காட்டுப்பகுதிகளில் காட்டு யானைகள் வசித்து வருகின்றன. அவற்றில் வயது முதிர்ந்த ‘படையப்பா’ என்ற ஆண் காட்டு யானை மிகவும் பிரபலமாகும்.

‘படையப்பா’ யானை

சாதுவான யானையாக அறியப்படும் ‘படையப்பா’ உணவு தேடி அவ்வப்போது சாலையோரக் கடைகளுக்கு வருவது உண்டு. இந்த யானையைக் காண சுற்றுலா பயணிகள் அதிக ஆர்வம் காட்டுகின்றனர். மூணாறு - உடுமலைபேட்டை ரோட்டில் பெரியவாரை எஸ்டேட் முதல் வாகுவாரை எஸ்டேட் வரை 25 கி.மீ., தொலைவு வரை ‘படையப்பா’ யானையின் நடமாட்டம் காணப்படும்.

கார் சேதம்

இந்த நிலையில், மூணாறு பெரியவாரை அருகே ஊராட்சி உறுப்பினர் கருப்பசாமி என்பவருக்கு சொந்தமான கார் சென்று கொண்டிருந்தபோது அங்கு வந்த ‘படையப்பா’ யானை திடீரென காரை தாக்கி உள்ளது. துதிக்கையால் காரை தாக்கி அதன் கண்ணாடி உள்ளிட்ட பகுதிகளை சேதப்படுத்தி உள்ளது. இதில் காருக்குள் இருந்த பயணிகள் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர்.

அச்சம்

காரை சேதப்படுத்திவிட்டு அங்கிருந்து விலகிச் சென்ற ‘படையப்பா’ யானை அருகில் உள்ள உள்ள காட்டுப் பகுதிக்குள் சென்றுள்ளது. சாதுவான ‘படையப்பா’ யானை மதம் பிடித்து வாகனங்களை தாக்கி வருவதாக அப்பகுதி மக்கள் மற்றும் சுற்றுலா பயணிகள் அச்சம் தெரிவித்துள்ளனர். இது குறித்து வனத்துறை உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

SCROLL FOR NEXT