பாட்னா,
பீகார் மாநிலம் சம்பாரண் மாவட்டத்தின் கல்யாண்பூரை சேர்ந்த ஹிருதய நந்த் சவுபே (84), அவரது மனைவி ஷைலா தேவி (76) மற்றும் அதே பகுதியை சேர்ந்த அனில் சவுபே (40) வசித்து வருகின்றனர். நேற்று இரவு மூன்று பேரும் சரயு விரைவு ரெயிலில் பிரயாக்ராஜில் இருந்து அயோத்தி நோக்கி பயணம் செய்துகொண்டிருந்தனர்.
அப்போது உடன் பயணித்த அடையாளம் தெரியாத மர்ம நபர்கள் விஷம்/போதை மருந்து கலந்த தின்பண்டங்களை கொடுத்து மயக்கமடைய செய்ததாக கூறப்படுகிறது. ரெயில் சுல்தான்பூர் நிலையத்தை வந்தடைந்தபோது, பயணிகள் மயங்கி கிடப்பதை கண்ட சக பயணிகள் உடனடியாக ரெயில்வே போலீசாருக்கு தகவல் கொடுத்தனர்.
மீட்கப்பட்ட மூவரும் உடனடியாக சுல்தான்பூரில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். அவர்களில் முதியவரான நந்த் சவுபே நிலைமை மட்டும் கவலைக்கிடமாக உள்ளதாகவும் அதனால் அவர் ஆக்சிஜன் உதவியுடன் தீவிர சிகிச்சை பெற்று வருவதாகவும் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் பாதிக்கப்பட்டவர்கள் சுயநினைவு திரும்பிய பின்னரே, சம்பவம் பற்றி முழு விவரம் தெரியவரும் என்று போலீசார் தெரிவித்தார்.
இந்த சம்பவம் தொடர்பாக ரெயில்வே போலீசார் வழக்கு பதிவு செய்து, பயணிகளுக்கு விஷம்/ போதை மருந்து கொடுத்து கொள்ளையடிக்கும் கும்பலை தீவிரமாக தேடி வருகின்றனர்.