தேசிய செய்திகள்

மைசூரு தசரா விழாவில் 750 கிலோ தங்க அம்பாரியை சுமக்கும் 54 வயது ‘பிரசாந்தா’ யானை

சாமுண்டீஸ்வரி அம்மன் கோவிலில் கடந்த 11-ந் தேதி தசரா விழா கோலாகலமாக தொடங்கியது.

உலக புகழ்பெற்ற மைசூரு தசரா விழா சாமுண்டி மலையில் அமைந்துள்ள சாமுண்டீஸ்வரி அம்மன் கோவிலில் கடந்த 11-ந் தேதி கோலாகலமாக தொடங்கியது. பக்தி பரவசத்துடன் தொடங்கியுள்ள இவ்விழாவில், நாள்தோறும் பல்வேறு கலை நிகழ்ச்சிகளும், கலாசார நிகழ்வுகளும் அரண்மனை நகரை திக்குமுக்காட செய்து வருகின்றன.

தசரா விழாவின் சிகர நிகழ்ச்சியும், உலக மக்கள் அனைவ ரும் ஆவலுடன் எதிர்பார்க்கும் பிரமாண்டமான 'ஜம்பு சவாரி' என்னும் தசரா ஊர்வலம் வருகிற 21-ந்தேதி வெகுவிமரிசையாக நடைபெற உள்ளது. இதில் சாமுண்டீஸ்வரி அம்மன் வீற்றிருக்கும் 750 கிலோ எடையுள்ள தங்க அம்பாரியை ஒரு யானை கம்பீரமாக சுமந்து செல்ல, அதை பின்தொடர்ந்து மற்ற யானைகளும், குதிரைகளும் அணிவகுத்து செல்லவிருக்கின்றன.

யானைகளுக்கு பயிற்சி

கடந்த 6 தசரா விழாக்களில் தொடர்ச்சியாக தங்க அம்பா ரியை தாங்கிப் பிடித்து உலகளாவிய புகழ்பெற்ற 'அபிமன்யு' யானைக்கு தற்போது 60 வயது நிறைவடைந்ததால், அதற்கு ஓய்வு அளிக்கப்பட்டு விட்டது. இதனால், இந்த ஆண்டு மைசூரு தசராவில் எந்த யானைக்கு அந்த வரலாற்று சிறப்பு மிக்க தங்க அம்பாரியை சுமக்கும் பெருமை கிடைக்க போகிறது என்ற பலத்த எதிர்பார்ப்பு மக்களிடையே நிலவி வந்தது.

இந்த தங்க அம்பாரி போட்டிக்காக முதற்கட்டமாக பிரசாந்தா, மகேந்திரா, தனஞ்செயா, சுக்ரீவா மற்றும் ஏக லவ்யா ஆகிய 5 யானைகள் தேர்ந்தெடுக்கப்பட்டன. இந்த யானைகளுக்கு அரண்மனை வளாகத்தில் இருந்து பன்னிமண்டபம் வரை உள்ள 5 கிலோ மீட்டர் தூரப் பாதையில், மணல் மூட்டைகளை சுமப்பது மற்றும் மர அம்பாரியை முதுகில் தாங்கி நடைபயிற்சி செய்வது போன்ற பயிற்சிகள் மாறி மாறி வழங்கப்பட்டு வந்தன.

தனஞ்செயா

பயிற்சியின் ஒரு பகுதியாக, 'மகேந்திரா யானைக்கு மர அம் பாரி முதுகில் கட்டப்பட்டு ராஜவீதியில் அழைத்துச் செல்லப்பட்டது. ஆனால், சிறிது தூரம் கடந்ததும் மகேந்திரா நடுவழியில் நின்றுவிட்டதால், அந்த யானை அம்பாரி சுமக்கும் போட்டியில் இருந்து விலக்கி கொள்ளப்பட்டது. இதற்கிடையே, மீதமிருந்த சுக்ரீவா மற்றும் ஏகலவ்யா ஆகிய யானைகளும் முழுமையான தகுதியை எட்டாத நிலையில், ஸ்ரீரங்கப்பட்டணாவில் நடைபெறவுள்ள தசரா விழாவில் வெள்ளி அம்பாரியை சுமக்க அமைதியான சுபாவம் கொண்ட ‘தனஞ்செயா' யானை ஒருமனதாக தேர்வு செய்யப்பட்டு அனுப்பி வைக்கப்பட்டது

பிரசாந்தா யானை தேர்வு

இறுதியாக களத்தில் எஞ்சியிருந்த 'பிரசாந்தா' யானையின் குணநலன்களை வனத்துறை அதிகாரிகளும், பாகன்களும் தீவிரமாக ஆய்வு செய்தனர். அப்போது, பொதுமக்களின் பெருந்திரளான கூட்ட நெரிசலுக்கும், காதுகளை பிளக்கும் இரைச்சலுக்கும் சற்றும் அஞ்சாமல், மிகுந்த அமைதியுடனும் அரச கம்பீரத்துடனும் நடந்து செல்லும் திறன் கொண்ட 'பிரசாந்தா' ஆண் யானை தங்க அம்பாரியை சுமக்க தகுதியான ஒரே யானை என்று ஒருமனதாக தேர்வு செய்யப்பட்டு இருப்பதாக நேற்று அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டு உள்ளது. இந்த தகவலை மாவட்ட பொறுப்பு மந்திரி யதீந்திரா சித்தரா மையா நிருபர்களிடம் தெரிவித்தார்.

இந்த அறிவிப்பு மைசூரு தசரா விழாவின் மீதான எதிர் பார்ப்பை பல மடங்கு அதிகரித்துள்ளதுடன், யானைகளின் ராஜநடையை காண மைசூரு நோக்கி படையெடுக்க சுற்றுலா பயணிகள் தயாராகி வருகின்றனர்.

SCROLL FOR NEXT