தேசிய செய்திகள்

மோடி உரை குறித்த அறிவிப்பு: மீண்டும் அவசர நிலை பிரகடனமா? பண மதிப்பு இழப்பு நடவடிக்கையா? - சமூக வலைத்தளங்களில் கிண்டல் பதிவுகள்

நாட்டு மக்களிடையே உரையாற்றப்போவதாக பிரதமர் மோடி அறிவித்த சில நிமிடங்களில் மீண்டும் அவசர நிலை பிரகடனமா? பண மதிப்பு இழப்பு நடவடிக்கையா? என சமூக வலைத்தளங்களில் கிண்டல் பதிவுகள் இடம் பெற்றன.

புதுடெல்லி,

பிரதமர் நரேந்திர மோடி நேற்று காலை திடீரென வெளியிட்ட அறிவிப்பில், நான் பகல் 11.45 மணி முதல் 12 மணி வரை நாட்டு மக்களிடையே முக்கிய உரையாற்ற உள்ளேன். என்னுடைய உரையை டி.வி., ரேடியோ, சமூக வலைத்தளங்களில் கேளுங்கள் என தெரிவித்து இருந்தார்.

இந்த அறிவிப்பு நாட்டு மக்களிடையே பல்வேறு எதிர்பார்ப்புகளை ஏற்படுத்தியது. அதே சமயம் டுவிட்டர் உள்ளிட்ட சமூக வலைத்தளங்களில் இது தொடர்பாக பல்வேறு கிண்டல் பதிவுகள் இடம் பெற்று இருந்தன.

இதுகுறித்து காஷ்மீர் முன்னாள் முதல்-மந்திரி உமர் அப்துல்லா தன்னுடைய டுவிட்டர் பதிவில், மோடி நாடாளுமன்ற தேர்தல் முடிவை அறிவிப்பார் என நினைக்கிறேன் என கிண்டலாக கூறியிருந்தார்.

சாகர் ராய் என்பவர் தன்னுடைய டுவிட்டர் பக்கத்தில், நிழல் உலக தாதா தாவூத் இப்ராகிம் இந்தியாவுக்கு நாடு கடத்தப்பட்டாரா? ஹபீஸ் சையது அல்லது மசூத் அசார் கொல்லப்பட்டார்களா? என்ற அறிவிப்பு வெளியாகுமோ? என கேள்வி எழுப்பி உள்ளார்.

முன்னாள் பிரதமர் இந்திரா காந்தி புகைப்படத்துடன் கூடிய ஒரு டுவிட்டர் பதிவில், மீண்டும் அவசர நிலை பிரகடனம் செய்யப்படலாம் என சந்தேகம் கிளப்பினார்.

அமீர் பதான் என்பவர், மோடி முக்கிய உரை நிகழ்த்த உள்ளார். நான் ஏற்கனவே ஏ.டி.எம். மையத்துக்கு வந்து விட்டேன் என கிண்டலாக பதிவிட்டுள்ளார்.

கவுரிஷ் சலுங்கே என்பவர் தன்னுடைய பதிவில், மற்றொரு பண மதிப்பு இழப்பு நடவடிக்கையா? மசூத் அசார் அல்லது தாவூத் இப்ராகிமை பிடித்து விட்டார்களா? பாகிஸ்தானை நாம் கைப்பற்றி விட்டோமா? மோடி உரையை ஆவலுடன் எதிர்பார்க்கிறேன் என கூறியிருக்கிறார்.

மற்றொரு பதிவில், இந்தியாவின் அறிவிப்பை கேட்டு பாகிஸ்தான் பிரதமர் இம்ரான்கான் ரத்த அழுத்தத்தை பரிசோதிப்பது போல படம் வெளியிடப்பட்டு இருந்தது.