தேசிய செய்திகள்

கொரோனாவை கையாள தேசிய அளவில் திட்டம் - மத்திய அரசுக்கு காங்கிரஸ் திடீர் கோரிக்கை

கொரோனா வைரஸ் தொற்று நோய் பரவுவதை தடுப்பதற்கு நாடு முழுவதும் ஒரு மாத காலத்துக்கு மேலாக ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டு அமலில் இருந்து வருகிறது.

புதுடெல்லி,

இந்த நிலையில், கொரோனா வைரஸ் விவகாரத்தை கையாள்வதற்கு தேசிய பேரழிவு மேலாண்மை சட்டத்தின்கீழ் தேசிய திட்டம் ஒன்றை வகுக்க வேண்டும் என்று மத்திய அரசுக்கு காங்கிரஸ் கட்சி நேற்று திடீரென ஒரு கோரிக்கையை முன்வைத்துள்ளது. இதையொட்டி அந்த கட்சியின் மூத்த தலைவர்களில் ஒருவரும், முன்னாள் மத்திய மந்திரியுமான கபில்சிபல், டெல்லியில் இருந்து கொண்டு நேற்று காணொலி காட்சி வழியாக நிருபர்களிடம் பேசினார்.

அப்போது அவர், ஊரடங்கு நடவடிக்கை குறித்து அரசாங்கம் மறுபரிசீலனை செய்ய வேண்டிய நேரம் வந்து விட்டது. ஏனெனில் மக்களை வீடுகளுக்குள் பூட்டி வைத்துக்கொண்டும், பொருளாதாரம் வெளியேயும் இருக்க முடியாது என கூறினார். மேலும், அரசு அதிகாரிகளை பொறுத்தமட்டில், அவர்களுக்கு களத்தில் உள்ள நிலவரம் தெரியாது, அரசாங்கத்துக்காக கொள்கை வகுப்பதோடு சரி எனவும் கூறினார்.

அத்துடன் இந்த நெருக்கடியான தருணத்தில் நீதி வழங்குவதை உறுதி செய்யும் வகையில் ஒரு கொள்கையை நீதித்துறை வகுக்க வேண்டும்; நீதி வழங்கும் முறையானது இப்போது அத்தியாவசிய சேவையாக கருதப்படுகிறது எனவும் அவர் குறிப்பிட்டார்.