மூணாறு,
கேரளம் மாநிலம் இடுக்கி மாவட்டம் மூணாறு பகுதியில் தற்போது 12 ஆண்டுகளுக்கு ஒரு முறை பூக்கும் நீலக்குறிஞ்சி பூக்கள் பூக்க தொடங்கியுள்ளன. மூணாறு அருகே உள்ள மாட்டுப்பட்டி, குரண்டிக் காடு உள்ளிட்ட பகுதிகளில் மலைச்சரிவுகள் மற்றும் பள்ளத் தாக்குகளில் ஆங்காங்கே நீலக்குறிஞ்சி பூக்கள் பூத்து குலுங்குகின்றன.
பசுமை போர்த்திய மலைச்சரிவுகளுக்கு நடுவே நீலநிறத்தில் பூத்துள்ள குறிஞ்சி பூக்கள், மலைப்பகுதிகளை மேலும் அழகாக காட்சியளிக்க செய்கின்றன. மலைகளின் மீது நீலநிற போர்வை விரித்ததுபோல் காணப்படும் இந்த காட்சி, இயற்கை ஆர்வலர்கள் மற்றும் சுற்றுலா பயணிகளை வெகுவாக கவர்ந்து வருகிறது.
இதனை காண வரும் நாட்களில் மூணாறுக்கு சுற்றுலா பயணிகளின் வருகை மேலும் அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.