தேசிய செய்திகள்

நீட் வினாத்தாள் கசிவு விவகாரம்: புனேவை சேர்ந்த பேராசிரியர் கைது- பரபரப்பு தகவல்

நீட் வினாத்தாள் கசிவு விவகாரத்தில் இதுவரை 7 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

எம்.பி.பி.எஸ்., பி.டி.எஸ். உள்ளிட்ட மருத்துவ படிப்புகளில் சேருவதற்கு நீட் நுழைவுத்தேர்வை, தேசிய தேர்வு முகமை ஆண்டுதோறும் நடத்தி வருகிறது. அதன்படி, 2026-27-ம் கல்வியாண்டில் மருத்துவ படிப்புகளில் சேருவதற்கான நீட் நுழைவுத்தேர்வு கடந்த 3-ந்தேதி நாடு முழுவதும் 552 நகரங்களிலும், துபாய் உள்ளிட்ட வெளிநாடுகளில் 14 இடங்களிலும் என மொத்தம் 5,432 தேர்வு மையங்களில் நடைபெற்றது. இந்த நீட் தேர்வை நாடு முழுவதும் சுமார் 22.80 லட்சம் மாணவ, மாணவிகள் எழுதினர். இந்த நிலையில் நீட் தேர்வு வினாத்தாள் பல்வேறு இடங்களில் தேர்வு நடைபெறுவதற்கு முன்பே கசிந்ததாக புகார் எழுந்தது. இதனை தொடர்ந்து நீட் நுழைவுத்தேர்வை ரத்து செய்வதாக தேசிய தேர்வு முகமை அறிவித்தது. மறு தேர்வு தேதியையும் அறிவித்துள்ளது.

நீட் வினாத்தாள் கசிவு வழக்கை சிபிஐ விசாரித்து வருகிறது. இதில் சிலர் கைது செய்யப்பட்டுள்ள நிலையில், வினாத்தாள் கசிவு விவகாரத்தில் முக்கிய குற்றவாளியாக சந்தேகிக்கப்படும் புனேவை சேர்ந்த வேதியியல் பேராசிரியர் கைது செய்யப்பட்டுள்ளார். இவரது பெயர் பிவி குல்கர்னி என்பதும் தேசிய தேர்வு முகமை சார்பாக தேர்வு நடைமுறைகளிலும் இவர் ஈடுபட்டு வந்துள்ளார் என்று தகவல்கள் வெளியாகியுள்ளன. நீட் தேர்வுக்கு வினாத்தாள் தயாரிக்கும் குழுவில் பல ஆண்டுகளாக இவர் இடம் பெற்றுள்ளார்.

ஓய்வு பெற்ற பேராசிரியான குல்கர்னியை நேற்று கைது செய்த சிபிஐ தீவிர விசாரணை நடத்தி வருகிறது. நீட்-யுஜி தேர்வுக்குத் தயாராகியிருந்த மாணவர்கள் குழுவிற்கு, மற்றொரு குற்றவாளியின் உதவியுடன் கேள்விகள் மற்றும் சரியான பதில்களை கசியவிட்டதாக சிபிஐ தெரிவித்துள்ளது. ரகசிய பயிற்சி வகுப்புகள் கடந்த ஏப்ரல் மாத இறுதியில் புனேயில் உள்ள அவரது இல்லத்தில் நடத்தப்பட்டதாக கூறப்படுகிறது. இந்த வழக்கில் குல்கர்னியின் கூட்டாளியாக செயல்பட்டதாக கூறப்படும் மனிஷா வாஹ்மரே வியாழக்கிழமை கைது செய்யப்பட்டார்.

வேதியியல் பேராசிரியரான குல்கர்னி “சிறப்பு பயிற்சி வகுப்புகளின் போது கேள்விகள், அதற்கான விருப்பத் தேர்வுகள் மற்றும் சரியான பதில்களை மாணவர்களிடம் கூறியுள்ளார். அவர் கூறிய கேள்விகளை மாணவர்கள் தங்களது நோட்டுப் புத்தகங்களில் கைப்பிரதியாக எழுதி வைத்ததுள்ளனர். அவை, கடந்த 3 ஆம் தேதி நடைபெற்ற நீட்-யுஜி 2026 தேர்வின் உண்மையான கேள்வித்தாளுடன் முழுமையாக ஒத்துப்போயுள்ளன” என்று சிபிஐ தனது அறிக்கையில் தெரிவித்துள்ளது.

இந்த ரகசிய வகுப்பில் கலந்து கொள்ள மாணவர்கள் பல லட்சம் செலுத்தியுள்ளனர். இதுவரை நடைபெற்ற விசாரணையில், வேதியியல் வினாத்தாள் கசிந்ததற்கான உண்மையான மூலத்தை கண்டறிந்துள்ளோம்” என்று கூறிய சிபிஐ, அதற்கான முக்கிய ஆதாரமாக குல்கர்னியின் கைது அமைந்துள்ளதாக தெரிவித்துள்ளது. நீட் வினாத்தாள் கசிவு விவகாரத்தில் இதுவரை 7 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.