கோப்புப்படம் 
தேசிய செய்திகள்

நீட் தேர்வு முறைகேடு: பல்வேறு கோணங்களில் சி.பி.ஐ. விசாரணை தீவிரம்

நீட் வினாத்தாள் கசிவின் முக்கிய குற்றவாளிக்கு 14 நாள் நீதிமன்ற காவல் விதிக்கப்பட்டு உள்ளது.

புதுடெல்லி,

இளங்கலை மருத்துவ படிப்புக்கான நீட் நுழைவுத் தேர்வு கடந்த 3-ந் தேதி நடைபெற்றது. இந்த தேர்வு முடிந்த பிறகு இந்த தேர்வு பற்றிய பல விமர்சனங்கள் வெளியே கசிந்தன. ராஜஸ்தானில் இந்தத் தேர்வுக்கான வினாத்தாள் கசிந்ததாகவும், பல மாணவர்கள் லட்சக்கணக்கில் பணம் கொடுத்து அதனைப் பெற்று தேர்வில் பங்கேற்றதாகவும் தெரியவந்தது.

இதனைத் தொடர்ந்து போலீசார் ராஜஸ்தானில் குறிப்பிட்ட மாணவர்களின் குடும்பத்தினரை விசாரணை வளையத்தில் எடுத்து விசாரித்தபோது பல்வேறு தகவல்கள் கிடைத்தன. இதில் வினாத்தாள் கசிவு உண்மை என தெரியவந்தது.

இதனைத்தொடர்ந்து நீட் தேர்வு ரத்து செய்யப்பட்டது. அதற்கு பதிலாக மறுதேர்வு ஜூன் 21-ந் தேதி நடைபெறும் என அறிவிக்கப்பட்டது. இதற்கிடையே இந்த வழக்கு சி.பி.ஐ. வசம் ஒப்படைக்கப்பட்டது. சி.பி.ஐ. அதிகாரிகள் பல கோணங்களில் இது தொடர்பாக விசாரணை நடத்தி வருகிறார்கள்.

வினாத்தாள் கசிவுக்கு மனிஷா மந்தாரே முக்கிய காரண கர்த்தாவாக செயல்பட்டது கண்டறியப்பட்டது. இவர் வினாத்தாள் தயாரிப்பு குழுவில் தாவரவியல் நிபுணராக இருந்தார். இவர் பிரகலாத் விட்டல் குல்கர்னி போன்ற பிற பேராசிரியர்களுடன் சேர்ந்து இந்த சதி வேலையில் ஈடுபட்டுள்ளார்.

சி.பி.ஐ. அதிகாரிகள் மனிஷா மந்தாரேவை கைது செய்து நேற்று டெல்லி ரோஸ் அவென்யூவில் உள்ள கோர்ட்டில் ஆஜர்படுத்தினார்கள். அப்போது சி.பி.ஐ. அதிகாரிகள் தரப்பில் வாதிட்ட வக்கீல் குற்றவாளிகளுக்கு எதிராக கடுமையான வாதங்களை முன் வைத்தார்.

இந்த வாதங்களுக்கு பிறகு நீதிபதி கோலெட் ரஷ்மி குஜூர், குற்றவாளியாக கருதப்படும் மனிஷா மந்தாரேவை 14 நாட்கள் நீதிமன்ற காவலில் வைக்க உத்தரவிட்டார்.

மந்தாரே, தேர்வுக்கு முன்னதாகவே தேர்வு எழுத இருந்த, தங்களது பண சதி திட்டத்துக்கு ஒப்புக்கொண்டிருந்த மாணவர்களை புனேவில் உள்ள தனது இல்லத்துக்கு கடந்த ஏப்ரல் மாதம் வரவழைத்து அனைத்து ஆலோசனைகளையும் வழங்கியதாக கூறப்படுகிறது.

இந்த வழக்கில் இன்னும் பல தகவல்கள் வெளியே வர உள்ளன. இந்த வழக்கில் ஏற்கனவே மனிஷா வாக்மரே மற்றும் பிரகலாத் விட்டல் குல்கர்னி ஆகியோர் கைது செய்யப்பட்டு இருக்கிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது. குற்றச்சம்பவத்தில் ஈடுபட்டவர்களிடம் சி.பி.ஐ. விசாரணை தீவிரமாக நடந்து வருகிறது.