புதுடெல்லி,
இளநிலை மருத்துவ படிப்புகளுக்கான நீட் நுழைவுத்தேர்வு வினாத்தாள் கசிவு காரணமாக ரத்து செய்யப்பட்டு உள்ளது. எனவே அடுத்த மாதம் (ஜூன்) 21-ந்தேதி மறுதேர்வு நடத்தப்படும் என மத்திய அரசு அறிவித்து உள்ளது. சுமார் 23 லட்சம் பேரின் மருத்துவ கனவை சிதைத்துள்ள இந்த விவகாரத்தில் மத்திய அரசை எதிர்க்கட்சிகள் கடுமையாக சாடி வரு கின்றன.
இந்த நிலையில் கல்வி, பெண்கள், குழந்தைகள் நலத்துறைக்கான நாடாளுமன்ற நிலைக்குழு வருகிற 21-ந்தேதி கூடுகிறது. அதில் இந்த முறைகேடு தொடர்பாக விவாதிக்க திட்டமிடப்பட்டு உள்ளது. இதற்காக நீட் தேர்வை நடத்தும் தேசிய தேர்வு முகமை தலைவர் பிரதீப் குமார் ஜோஷி, உயர்கல்வித்துறை செயலாளர் வினீத் ஜோஷி உள்ளிட்டோருக்கு சம்மன் அனுப்பி உள்ளது.
மேலும் இந்த கூட்டத்துக்கான நிகழ்ச்சி நிரல் வெளியிடப்பட்டு உள்ளது. அதில் தேசிய தேர்வு முகமையில் சீர்திருத்தம் செய்வது தொடர்பாக கல்வி அமைச்சக அதிகாரிகளின் கருத்துகள் கேட்கப்படும் என கூறப்பட்டு உள்ளது. மேலும் தேசிய தேர்வு முகமை சீர்திருத்தம் தொடர்பாக ராதாகிருஷ்ணன் கமிட்டி வழங்கியுள்ள பரிந்துரைகளை அமல்படுத்தியிருப்பது குறித்த ஆய்வை மேற்கொள்ளவும், வினாத்தாள் கசிவு வழக்கு தொடர்பான விசாரணை நிலவரம் குறித்து ஆய்வு செய்யவும் முடிவு செய்யப்பட்டு உள்ளது.
இதைப்போல கல்வியில் செயற்கை நுண்ணறிவின் தாக்கம் மற்றும் மாணவர்களின் வேலைவாய்ப்புத் திறனை மேம்படுத்துவதற்கான உத்திகள் குறித்தும் இந்தக் குழு விவாதிக்கும். இந்த கலந்துரையா டல்களுக்காக ஆந்த்ரோபிக் இந்தியா, பிரதம், கான்பூர் ஐ.ஐ.டி., இன்போசிஸ் மற்றும் சென்னை ஐ.ஐ.டி. ஆகியவற் றின் பிரதிநிதிகள் அழைக்கப்பட்டுள்ளனர்.
பின்னர் நடைபெறும் மற்றொரு அமர்வில் உயர்கல்வி நிறுவனங்களின் பிரச்சினைகள் குறிப்பாக இடஒதுக்கீடு, காலியிடங்கள் மற்றும் தேசிய கல்விக்கொள்கை குறித்து விவாதிக்கப்பட உள்ளது.
இதற்காக அலிகார் முஸ்லிம் பல்கலைக்கழக துணை வேந்தர், தேசிய சிறுபான்மை கல்வி நிறுவனங்களின் தலைவர் உள்ளிட்டோர் அழைக்கப்பட்டு உள்ளனர். இந்த நாடாளுமன்ற நிலைக்குழுவானது காங்கிரஸ் மூத்த தலைவர் திக்விஜய் சிங் தலைமையில் செயல்படுவது குறிப்பிடத்தக்கது.