புதுடெல்லி,
எம்.பி.பி.எஸ்., பி.டி.எஸ். உள்ளிட்ட மருத்துவப் படிப்புகளில் சேருவதற்கு 'நீட்' நுழைவுத்தேர்வு அவசியம். இந்த தேர்வை தேசிய தேர்வு முகமை ஒவ்வொரு ஆண்டும் நடத்தி வருகிறது. அதன்படி, 2026-27-ம் கல்வியாண்டில் மருத்துவப் படிப்புகளில் சேருவதற்கான நீட் நுழைவுத்தேர்வு கடந்த 3-ந்தேதி நாடு முழுவதும் 552 நகரங்களிலும், துபாய் உள்ளிட்ட வெளிநாடுகளில் 14 இடங்களிலும் என மொத்தம் 5,432 தேர்வு மையங்களில் நடைபெற்றது. இந்த நீட் தேர்வை நாடு முழுவதும் சுமார் 22.80 லட்சம் மாணவ, மாணவிகள் எழுதினர்.
மிகக்கடுமையான, கட்டுப்பாடுகள், சோதனைக்கு பின்னர் நடைபெற்ற இந்த தேர்வில் முறைகேடு நடந்துவிட்டதாக சில நாட்களுக்கு முன்பு வெளியான தகவல் அதிர்ச்சியை கிளப்பியது.
வினாத்தாள் கசிந்த விவகாரத்தின் எதிரொலியாக நாடு முழுவதும் கடந்த 3-ம் தேதி (மே.3) நடத்தப்பட்ட நீட் தேர்வு ரத்து செய்யப்படுவதாகவும், மறு தேர்வு நடத்தப்படும் என்றும் தேசிய தேர்வு முகமை அறிவித்தது. இது மாணவர்கள், பெற்றோர்கள், சமூக ஆர்வலர்கள், கல்வியாளர்கள் மத்தியில் கடும் விமர்சனங்களை உருவாக்கியது.
இந்த நிலையில் வரும் ஜூன் 21-ம் தேதி நீட் மறு தேர்வு நடத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. தேசிய தேர்வு முகமையின் அதிகாரப்பூர்வ எக்ஸ் பக்கத்தில் இந்தத் தகவல் பகிரப்பட்டுள்ளது. மத்திய அரசின் ஒப்புதலோடு ஜூன் 21-ம் தேதி நீட் மறு தேர்வு நடத்தும் முடிவு எடுக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்தநிலையில் இது குறித்து மத்திய கல்வித்துறை மந்திரி தர்மேந்திர பிரதான் டெல்லியில் செய்தியாளர்கள் சந்திப்பில் கூறியதாவது:-
நீட் முறைகேடு நடைபெற்றதாக தெரியவந்தவுடன் தேர்வை ரத்து செய்வதே சிறந்தது என முடிவு செய்தோம்.
இளநிலை மருத்துவ படிப்புகளுக்கான நீட் நுழைவுத்தேர்வு அடுத்தாண்டு முதல் ஆன்லைனில் நடத்தப்படும்.
ஓ.எம்.ஆர் தேர்வுத்தாள் முறையைவிட கணினி வழித்தேர்வு முறை ஒப்பீட்டளவில் சிறந்தது.
ஜூன் 21-ல் நடைபெறும் நீட் மறு தேர்வுக்கு கட்டணம் எதுவும் வசூலிக்கப்படாது. மோசடி நபர்கள், கல்வி மாபியாக்களின் சதிச்செயலால் மாணவர்கள் பாதிக்கப்படக்கூடாது. தேர்வு நேரத்தை 15 நிமிடங்கள் நீட்டிக்க தேசிய தேர்வு முகமை முடிவு செய்துள்ளது. பிற்பகல் 2 மணி முதல் மாலை 5 மணி வரை நடைபெறவிருந்த தேர்வு, தற்போது மாலை 5.15 மணி வரை தொடரும்.
இந்தத் தேர்வுக்கான ஹால் டிக்கெட் ஜூன் 14-ஆம் தேதிக்குள் அனைத்து தேர்வர்களுக்கும் வழங்கப்படும். மாணவர்களுக்கான போக்குவரத்து வசதிகளை ஏற்பாடு செய்வது குறித்து மத்திய அரசு மாநில அரசுகளுடன் பேச்சுவார்த்தை நடத்தி ஏற்பாடு செய்யப்படும். மேலும் இந்த முறை நீட் தேர்வின் போது மாணவர்கள் போக்குவரத்தில் குறைந்தபட்ச சிரமங்களை எதிர்கொள்ளும் வகையில் மாநில முதல்-மந்திரிகளுடன் நான் தனிப்பட்ட முறையில் பேச உள்ளேன். ஜூன் 21-ஆம் தேதி வானிலை மாற்றங்களைக் கருத்தில் கொண்டு, ஒரு மாற்று ஏற்பாட்டையும் தேசிய தேர்வு முகமை பரிசீலித்து வருகிறது என்றார்.