புதுடெல்லி
மருத்துவ படிப்புகளில் சேருவதற்காக தேசிய அளவில் நீட் எனப்படும் நுழைவுத்தேர்வு ஆண்டுதோறும் நடத்தப்படுகிறது. அதன்படி, 2026-27-ம் கல்வியாண்டுக்கான நீட் தேர்வு இன்று நடைபெறுகிறது.
இந்த தேர்வை இதுவரை இல்லாத வகையில் 22.80 லட்சம் மாணவ-மாணவிகள் எழுதுகின்றனர். பிற்பகல் 2 மணி முதல் மாலை 5.20 மணி வரை அதாவது 3 மணி நேரம் 20 நிமிடம் தேர்வு நடைபெறுகிறது. தமிழ் உள்ளிட்ட 13 மொழிகளில் இந்த தேர்வை எழுத முடியும்.
இந்தியா மற்றும் வெளிநாடுகளில் நடத்தப்படும் இந்த தேர்வானது 5,400-க்கும் கூடுதலான மையங்களில் நடத்தப்படுகிறது. தேர்வு சுமுக முறையில் நடத்தப்பட வேண்டும் என்ற நோக்கில் 2 லட்சத்திற்கும் மேற்பட்ட அதிகாரிகள் பணியில் ஈடுபடுத்தப்பட்டு உள்ளனர்.
கூடுதல் நேரம் உள்ளிட்ட சிறப்பு வசதிகள், மாற்றுத்திறனாளி தேர்வர்களுக்காக ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளன. அவர்கள் மாலை 6 மணி வரை தேர்வு எழுத அனுமதி அளிக்கப்படும். நீட் இளநிலை தேர்வு எழுதும் மாணவ மாணவிகளுக்கு மத்திய கல்வி மந்திரி தர்மேந்திர பிரதான் இன்று தன்னுடைய வாழ்த்துகளை தெரிவித்து கொண்டார்.
இதுபற்றி அவர் வெளியிட்ட எக்ஸ் வலைதள பதிவில், நீட் இளநிலை தேர்வை இன்று எழுத கூடிய அனைத்து மாணவ மாணவிகளுக்கும் வாழ்த்துகளை தெரிவித்து கொள்கிறேன். அமைதியாகவும், கவனத்துடனும் இருங்கள். சிறந்த முறையில் தேர்வை எழுதுங்கள் என தெரிவித்து உள்ளார். மருத்துவ தொழிலானது இரக்கம், சேவை மற்றும் வாழ்க்கை முழுவதும் கற்றலுக்கான உள்ளார்ந்த ஈடுபாட்டை குறிக்கிறது.
இந்த பாதையை நோக்கி அர்த்தமுள்ள அடியை எடுத்து வைக்கும் வகையில் ஒவ்வொரு மாணவ மாணவிக்கும் தெளிவும் மற்றும் நம்பிக்கையும் கிடைக்கும்படி வாழ்த்துகிறேன் என்றும் அவர் பதிவிட்டு உள்ளார்.