தேசிய செய்திகள்

நீட் வினாத்தாள் கசிவு: அடுத்தடுத்து சிக்கும் முக்கிய புள்ளிகள்; 10-வது நபர் கைது

அவருடைய மொபைல் போனில் இருந்து, நீட் வினாத்தாள்களை அதிகாரிகள் கைப்பற்றி உள்ளனர்.

புதுடெல்லி

எம்.பி.பி.எஸ்., பி.டி.எஸ். உள்ளிட்ட மருத்துவ படிப்புகளில் சேருவதற்கு நீட் நுழைவுத்தேர்வை, தேசிய தேர்வு முகமை (என்.டி.ஏ.) ஆண்டுதோறும் நடத்தி வருகிறது. அதன்படி, 2026-27-ம் கல்வியாண்டில் மருத்துவ படிப்புகளில் சேருவதற்கான நீட் நுழைவுத்தேர்வு கடந்த 3-ந்தேதி நாடு முழுவதும் 552 நகரங்களிலும், துபாய் உள்ளிட்ட வெளிநாடுகளில் 14 இடங்களிலும் என மொத்தம் 5,432 தேர்வு மையங்களில் நடைபெற்றது.

இந்த நீட் தேர்வை நாடு முழுவதும் சுமார் 22.80 லட்சம் மாணவ, மாணவிகள் எழுதினர். இந்த நிலையில் நீட் தேர்வு வினாத்தாள் பல்வேறு இடங்களில் தேர்வு நடைபெறுவதற்கு முன்பே கசிந்ததாக புகார் எழுந்தது. இதனை தொடர்ந்து நீட் நுழைவுத்தேர்வை ரத்து செய்வதாக தேசிய தேர்வு முகமை அறிவித்தது.

நீட் வினாத்தாள் கசிவு வழக்கை சி.பி.ஐ. விசாரித்து வருகிறது. வினாத்தாள் கசிவு விவகாரத்தில் முக்கிய குற்றவாளிகள் அடுத்தடுத்து கைது செய்யப்பட்டு வருவது அதிர்ச்சி ஏற்படுத்தி உள்ளது. இதில், பேராசிரியைகளான மனிஷா மந்தாரே மற்றும் மனிஷா வாக்மரே ஆகிய இருவரும் முக்கிய புள்ளிகளாக செயல்பட்டு உள்ளனர்.

இந்நிலையில், சிவராஜ் மோதிகாவோங்கர் என்பவரை சி.பி.ஐ. கைது செய்துள்ளது. இவர் மராட்டியத்தின் லத்தூர் மாவட்டத்தில் ஆர்.சி.சி. என்ற பெயரில் பயிற்சி மையம் ஒன்றை நடத்தி வருகிறார். அதன் நிறுவனர் மற்றும் இயக்குநராகவும் இருந்து வருகிறார்.

என்.டி.ஏ.வுடன் தொடர்புடைய அதிகாரிகள் மற்றும் பிற குழுக்களுடன் சேர்ந்து சிவராஜ் மோதிகாவோங்கர் மோசடி வேலைக்கான சதி திட்டம் தீட்டியது தெரிய வந்துள்ளது. 7 மணிநேரம் நடந்த விசாரணையின் முடிவில், அவர் கைது செய்யப்பட்டார்.

மோதி கடந்த ஏப்ரல் 23-ந்தேதி, வினாத்தாள் மற்றும் விடைத்தாள்களை பெறுவதற்காக மற்றொரு குற்றவாளியுடன் சேர்ந்து மோசடி வேலையில் ஈடுபட்டு உள்ளார். அவருடைய மொபைல் போனில் இருந்து, நீட் வினாத்தாள்களை அதிகாரிகள் கைப்பற்றி உள்ளனர். அதனை தடய அறிவியல் சோதனைக்கு உட்படுத்தி உள்ளனர்.

இதற்கு முன்பு, புனேவை சேர்ந்த வேதியியல் பேராசிரியர் பி.வி. குல்கர்னியும் கைது செய்யப்பட்டுள்ளார். நீட் தேர்வுக்கு வினாத்தாள் தயாரிக்கும் குழுவில் பல ஆண்டுகளாக இவர் இடம் பெற்றுள்ளார். தேசிய தேர்வு முகமை சார்பாக தேர்வு நடைமுறைகளிலும் இவர் ஈடுபட்டு வந்துள்ளார் என்று தகவல்கள் வெளியாகியுள்ளன. இதுவும் மோசடி செயலுக்கு சாதகம் ஏற்படுத்தும் வகையில் அமைந்துள்ளது.

வேதியியல் பேராசிரியரான குல்கர்னி, சிறப்பு பயிற்சி வகுப்புகள் என்ற பெயரில் ரகசிய வகுப்புகள் நடத்தியுள்ளார். இதில் கலந்து கொள்ள மாணவர்கள் பல லட்சம் செலுத்தியுள்ளனர். நீட் வினாத்தாள் கசிவு விவகாரத்தில் இதுவரை 10 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். தொடர்ந்து விசாரணை நடந்து வருகிறது. நீட் மறுதேர்வு ஜூன் 21-ந்தேதி நடைபெறுகிறது.